ஹரியானா வன்முறை மிக துரதிர்ஷ்டவசமானது: முதல்வர் மனோகர் லால் கட்டார் வேதனை

By SG Balan  |  First Published Aug 2, 2023, 4:06 PM IST

நூவில் நடந்த வன்முறை சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.


ஹரியானாவின் நூர் வன்முறை சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் நடந்த வன்முறை குறித்து புதன்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது முதல்வர் கட்டார் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார். வன்முறையில் 4 பொதுமக்கள் மற்றும் 2 ஊர்க்காவல் படையினர் உயிரிழந்ததாகவும் இதுவரை 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Tap to resize

Latest Videos

"காயம் அடைந்தவர்கள் தற்போது அவர்கள் குருகிராமில் உள்ள நல்ஹரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அரசு மற்ற குற்றவாளிகளையும் கண்டறிந்து மக்கள் முன் நிறுத்தும்" எனவும் கட்டார் சொல்லி இருக்கிறார். என்றார். மாநில மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைமறைவானவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகச் சொன்ன ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். "தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தப்ப மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நீதி கிடைக்கும்" என்றும் உறுதி கூறியுள்ளார்.

மாநிலத்தில் பாதுகாப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார். வன்முறை சம்பவம் நடந்த நூவில் 30 கம்பெனி பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து 20 கம்பெனி கூடுதல் பாதுகாப்புப் படைகள் கோரப்பட்டுள்ளன. பல்வாலில் 3 குழுவினரும், குருகிராமில் 2 குழுவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனனர்.  நூஹில் பாதுகாப்புப் பணியில் 14 கம்பெனி மத்தியப் படைகள் ஈடுபட்டுள்ளன என்று முதல்வர் கட்டார் கூறியிருக்கிறார்.

மாநிலத்தில் வசிப்பவர்களின் பாதுகாப்பே இப்போது மிக முக்கியமான விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். மாநிலத்தில் அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்றும் மனோகர் லால் கட்டார் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஹரியானாவில் திங்கட்கிழமை நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தின்போது இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சுமார் 2500 பேர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த சிவன் கோவிலுக்குள் தஞ்சம் புகுந்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகு குருகிராமில் இரவில் நடந்த மோதலில் ஒரு இமாம் உயிரிழந்தார். இரண்டு ஊர்க்காவல் படையினரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ஹரியானாவில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் செவ்வாய்க்கிழமை மதியம் பாட்ஷாபூரில் ஒரு புதிய மோதல் ஏற்பட்டது.

click me!