நாட்டின் வடகிழக்கு பகுதிகள் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பகுதி ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், நாட்டின் வடகிழக்கு பகுதி பாலைவனமாக இருந்து தற்போது செழிப்பான பகுதியாக மாறியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் ட்ரிப்யூன் செய்தி இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த பிரதமர் மோடி, வடக்கு கிழக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அனைத்து துறைகளிலும் உள்ள இப்பகுதி இளைஞர்களின் திறமைகள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்துக்கு பிறகு வழக்கிழக்கு மாநிலங்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் வடகிழக்கு மக்களை மாற்றந்தாய் பிள்ளையாக பார்த்தது. ஏனெனில் அவர்களுக்கு இப்பகுதியில் தேர்தல் ஆதாயங்கள் மிகவும் குறைவு என குற்றம் சாட்டினார்.
அவர்களைப் (காங்கிரஸ்) பொறுத்தவரை, வடகிழக்கு மிகவும் தொலைவில் இருந்தது. அதன் வளர்ச்சிக்காக உழைப்பதும் கடினமாக இருந்தது. ஆனால், நாங்கள் அரசாங்கத்தை அமைத்த போது, வடகிழக்கில் உள்ள நிலையை மாற்றுவது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தோம். தனிமைப்படுத்தப்பட்டு கிடந்த வடகிழக்கை ஒருங்கிணைப்பு கொள்கையுடன் மாற்றினோம் என பிரதமர் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட வடகிழக்கு என்பதை கடந்த 10 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்து, கிழக்கிற்கான பாரதத்தின் நுழைவாயிலாக அதை வளர்த்துள்ளோம் என்பது கண்கூடாக தெரியும் உண்மை என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 70 தடவைகள் வடகிழக்குக்கு சென்றுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், தனக்கு முன் இருந்த அனைத்துப் பிரதமர்களும் மேற்கொண்ட மொத்தப் பயணங்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும். 2015 ஆம் ஆண்டு முதல், மத்திய அமைச்சர்கள் 680 தடவைகளுக்கு மேல் வடகிழக்கிற்கு விஜயம் செய்துள்ளனர். மக்களின் வீட்டு வாசலில் ஆட்சியை கொடுத்துள்ளோம். புறக்கணிக்கப்பட்டு விட்டோம் என்ற அவர்களின் எண்ணத்தை மாற்றியுள்ளோம் என தெரிவித்தார்.
இன்று, வடகிழக்கு புதிய இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிக் கதையாக உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில், இப்பகுதியின் வளர்ச்சிக்காக நாங்கள் செய்த முதலீடுகள், கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசாங்கமோ அல்லது வேறு எந்த முந்தைய அரசாங்கமோ ஒதுக்கிய நிதியை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என பிரதமர் மோடி கூறினார். மேலும், வடகிழக்கு பிராந்தியங்களில் பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.
வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியை கணிசமாகக் கட்டுப்படுத்திய அதே வேளையில், மக்களின் நம்பிக்கையைப் பெறவும், அமைதியை உறுதிப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 11 அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றமாகவும் எனவும் அவர் கூறினார்.
திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரின் சவாலை ஏற்ற காங். சிட்டிங் எம்.பி. சசி தரூர்!
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 9,500 க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் சரணடைந்து சமூகத்துடன் இணைந்துள்ளனர். பாஜக அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாக, 2014 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் முழு வடகிழக்கிலும் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
“இந்தியாவின் வளர்ந்து வரும் இணைப்புகளுக்கான தளமாக இப்பகுதியை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது. பிரச்சினைகள் இருந்தன. ஆனால் நாங்கள் தீர்வுகளில் கவனம் செலுத்தினோம். அதன் விளைவாக, சாலை, ரயில், விமானம், நீர்வழிகள் போக்குவரத்தில் மேம்பட்ட உள்கட்டமைப்பு காணப்படுகிறது. எல்லையோர கிராமங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மியான்மர் நாட்டினர் இந்தியாவுக்குள் நுழைவது பெரும்பாலும் அவர்களின் உள்நாட்டு பிரச்சினை காரணமாக என்பது அனைவரும் அறிந்ததே. மியான்மர் பிரச்சினைகள், வடகிழக்கு மாநிலங்களை நேரடியாக பாதிக்கும் என்பதால் மியான்மர் அதிகாரிகளிடம் இந்தப் பிரச்னையை எழுப்பி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
வடகிழக்கு நிலத்தில் மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்களைக் கொண்டு வருகிறோம். மியான்மரில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்புவதை எதிர்நோக்குகிறோம். இதனால், அந்நாட்டு மக்கள் அமைதியாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியும் என பிரதமர் மோடி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.