
வரும் திங்கட்கிழமை முதல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் காலவரையரையின்றி மூடப்படும் என்று புதுச்சேரி திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பையொட்டி, புதுச்சேரியில் இயங்கி வரும் திரையரங்குகளுக்கு டிக்கெட்டுகளின் திருத்தப்பட்ட கட்டணத்தை புதுச்சேரி அரசு அறிவித்தது.
ஏ.சி. திரையரங்குகளில் பாக்ஸ் ரூ.175, பால்கனி / டீலக்ஸ் ரூ.160, முதல் வகுப்பு 105, இரண்டாம் வகுப்பு ரூ.80, மூன்றாம் வகுப்பு ரூ.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏசி இல்லாத திரையரங்குகளில் பாக்ஸ் ரூ.70, பால்கனி / டீலக்ஸ் ரூ.55, முதல் வகுப்பு 45, இரண்டாம் வகுப்பு ரூ.35, மூன்றாம் வகுப்பு ரூ30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய டிக்கெட்டுகளின் விலையை ஜூலை 7 ஆம் தேதிக்குள் திரையரங்குகளின் உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் லக்கி பெருமாள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திங்கட்கிழமை முதல் காலவரையரையின்றி மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புதிதாக விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசு, திரையரங்குகளுக்கு விதித்துள்ள 28 சதவீத வரியை கட்ட தயாராக இருக்கிறோம் என்றும், ஆனால் மாநில அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கேளிக்கை வரியினை கட்ட நாங்கள் தயாராக இல்லை என்றும் கூறினார்.
மாநில அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யும் வரை புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் காலவரையின்றி மூடப்படும் என்றார். திங்கட்கிழமையில் இருந்து அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என்றும், மாநில அரசின் கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் மறுபரிசீலனை செய் வேண்டும் எனவும் லக்கி பெருமாள் தெரிவித்தார்.