
இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125வது ஆண்டை குறிப்பிடும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விடுகிறது. இது தொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
இந்தியாவின் தேசிய ஆவண காப்பகத்தின் 125வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளது.
இந்த புதிய நாணயத்தின் மத்தியில் அசோகா தூணில் சிங்க முகமும், அதற்கு கீழ் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டு இருக்கும். இடதுபுறம் ‘பாரத்’ என்ற வார்த்தை தேவநாகரியிலும், வலது பக்கம் ‘இந்தியா’ என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
சிங்கமுகத்தின் கீழ் பகுதியில் ரூபாய் மதிப்பு குறியீடும், மதிப்பிலக்கம் 10 என்பது எண்ணிலும், நாணயத்தின் மறுபக்கம் தேசிய ஆவண காப்பக கட்டிடத்தின் உருவப்படம் மத்தியிலும், உருவப்படத்தின் கீழே ‘125’ என்று ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.
125வது ஆண்டு கொண்டாட்டங்களின் சின்னம், தேசிய ஆவண காப்பக கட்டிட உருவப்படத்தின் மேல்புறம் ‘இந்திய தேசிய ஆவண காப்பகம்’ என தேவநாகரியிலும், கீழ்புறத்தில் தேசிய ஆவண காப்பகம் என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.
மேலும், உருவப்படத்தின் இடது மற்றும் வலதுபுறத்தின் மேல்பக்கத்தில் 125வது ஆண்டு விழாவை குறிப்பிடும் வகையில் ‘1891’ மற்றும் ‘2016’ என எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
கடந்த 2011ம் ஆண்டு இந்திய நாணய சட்டத்தின்படி, இந்த நாணயங்கள் செல்லத்தக்கவை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இந்த மதிப்பிலக்க நாணயங்களும் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.