"இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை. எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படுவோம். ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்லவோம்" என சஸ்மித் பத்ரா கூறுகிறார்.
ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், திங்களன்று தனது கட்சியின் ஒன்பது ராஜ்யசபா எம்.பி.க்களுடன் நடத்திய கூட்டத்தில்ர நாடாளுமன்ற கூட்டத்தொடரில், வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.
பிஜேடி எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தின் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளை தகுந்த முறையில் குரல் எழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஜேடி மாநிலங்களவைக் கட்சித் தலைவர் சஸ்மித் பத்ரா, “இந்த முறை பிஜேடி எம்பிக்கள் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை மத்திய பாஜக அரசு புறக்கணித்தால் அதனை எதிர்த்து போராடுவது உறுதி" எனத் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் உள்ள ஒன்பது எம்.பி.க்களும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள் என்று கூறிய பத்ரா, நாடாளுமன்றத்தில் மாநில மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு பட்நாயக் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
பிஜேடி எம்.பி.க்கள் ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவதோடு, ஒடிசாவில் மோசமான மொபைல் இணைப்பு மற்றும் வங்கிக் கிளைகள் குறைவாக இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளைப் பற்றியும் பேசுவார்கள் என பத்ரா கூறினார்.
"நிலக்கரி உரிமம் தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும் என்ற ஒடிசாவின் கோரிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இது மாநில மக்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது" என்றும் பத்ரா தெரிவித்தார்.
முன்புபோல, எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளின் அடிப்படையில் பாஜக அரசுக்கு பிஜேடி ஆதரவை வழங்குமா என்ற கேள்விக்கு, பதில் கூறிய பத்ரா, "இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை. எதிர்க்கட்சியாக மட்டுமே செயல்படுவோம். ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்லவோம்" என்றார்.