
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வரும் வரும் 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் ஆன்லைனில் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
மலேசியா ஆசியான் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இதற்கிடையே, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது அன்பு நண்பர் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் ஒரு அன்பான உரையாடல் நடந்தது. மலேசியாவின் ஆசியான் மாநாட்டு தலைமைக்காக அவரை வாழ்த்தினேன். நடைபெற உள்ள உச்சி மாநாடுகள் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் பங்கேற்கவும், ஆசியான் -இந்தியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்."
பிரதமர் மோடியின் இந்த முடிவு குறித்துப் பேசிய மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், "பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். ஆசியான் உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து இருவரும் விவாதித்தோம். அதே வேளையில், இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை இன்னும் கொண்டாடப்படுவதால், ஆன்லைனில் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்தார். அவரது இந்த முடிவை மதிக்கிறேன்," என்று கூறினார்.
மேலும், மலேசியா-இந்தியா உறவை வலுப்படுத்துவதற்கும், ஆசியான் -இந்தியா உறவை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது என்றும் அன்வர் இப்ராகிம் தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி முறையில் கலந்துகொள்வார். இந்தியா சார்பில் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் நேரில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசியான் உச்சி மாநாட்டில், மலேசியாவின் அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் மலேசியப் பயணம் ரத்து செய்யப்பட்டதன் மூலம், டிரம்ப் உடனான சந்திப்பு இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.