
Bihar election CM candidate : பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் மகாகத்பந்தனுக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் (ஐக்கிய), லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை கூட்டணி அமைத்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தனில், காங்கிரஸ் கட்சி, தீபங்கர் பட்டாச்சார்யா தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சிபிஐ-எம்எல்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்), மற்றும் முகேஷ் சஹானியின் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகியவை கூட்டணியில் உள்ளது. மேலும் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் மாநிலத்தின் அனைத்து 243 இடங்களிலும் தனித்து போட்டியிடவுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பீகாரில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து பேச்சுவார்த்தை மூலம் தற்போது சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகார் முதலமைச்சராக உள்ள நிதீஷ்குமாரை வீழ்த்தும் வகையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவை மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், நாட்டின் நிலைமை குறித்து அனைவரும் கவலைப்பட வேண்டும். அதனால்தான், கார்கே ஜி, ராகுல் ஜி மற்றும் இங்கு அமர்ந்திருக்கும் மற்றவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்தத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் என்று அறிவித்திருப்பதாக கூறினார். தேஜஸ்வி ஒரு இளைஞர். அவருக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது, மக்கள் அவரை ஆதரிப்பார்கள்," என்று கூறினார்.
மேலும் வேலையின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பீகார் மக்கள் மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு செயல்படும் விதம் 'ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்' என்று அவர் குறிப்பிட்டார். நாடு எந்த திசையில் செல்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் விமர்சித்தால், சிறையில் அடைக்கப்படுகிறீர்கள் என தெரிவித்தார். நாடு பீகாரை உற்று நோக்குகிறது. வேலையின்மை பிரச்சனை தொடர்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
விகாஸ்ஷீல் இன்சான் கட்சியை நிர்வகிக்கும் சஹானி, மகாகத்பந்தன் கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 3.5 ஆண்டுகளாக இந்த தருணத்திற்காக காத்திருந்தேன். அந்த தருணம் இப்போது வந்துவிட்டது. பாஜக எங்கள் கட்சியை உடைத்து, எங்கள் எம்எல்ஏக்களை இழுத்தது... அந்த நேரத்தில், நாங்கள் கையில் கங்கை நீருடன் சபதம் செய்தோம் - 'பாஜகவை நாங்கள் உடைக்கும் வரை, அவர்களை விடமாட்டோம்'...
நேரம் வந்துவிட்டது, மகாகத்பந்தனுடன் வலுவாக நின்று, பீகாரில் எங்கள் அரசை அமைத்து, மாநிலத்திலிருந்து பாஜகவை வெளியேற்றுவோம். மகாகத்பந்தன் ஒன்றுபட்டு வலுவாக உள்ளது. வரும் காலத்தில், நாங்கள் உழைத்து எங்கள் அரசை அமைப்போம் என்று அவர் கூறினார்.