
ஏ.டி.எம்.களில் நிரப்ப பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவதையடுத்து, இனிமேல், ஏ.டி.எம்.களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் வங்கியில் இருந்து முற்பகலுக்கு உள்ளாகவே பணத்தை பெற்றுச் சென்று விட வேண்டும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது-
ரூ.15 ஆயிரம் கோடி
நாடுமுழுவதும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்கள் சார்பாக 8 ஆயிரம் வாகனங்கள் இயக்கப்பட்டு, நாள்தோறும் வங்கிகளுக்கு இடையேயும், ஏ.டி.எம்.களில் நிரப்பவும் ரூ.15 ஆயிரம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இரவு நேரங்களில் தனியாக ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம், ஏ.டி.எம்.களில் வங்கிகள் சார்பாக பணம் நிரப்பப்பட்டு வருகின்றன.
கொள்ளை சம்பவங்கள்
நாட்டில் அதிகரித்து வரும் ஏ.டி.எம். கொள்ளை, ஏ.டி.எம்.களில் நிரப்ப பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது, வாகனங்களையே திருடிக்கொண்டு செல்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
விதிமுறைகள்
இந்த விதிமுறைகள் அனைத்தும் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அங்கு ஒப்புதல் கிடைத்தபின், நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பிவைக்கப்படும்.
9 மணி
அதன்படி, மாநகரங்கள், பெருநகரங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் இரவு 9 மணிக்கு மேல் பணத்தை நிரப்பக் கூடாது. கிராமப்புறங்களில் மாலை 6 மணிக்கு மேலும், நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேலும் பணத்தை கொண்டு சென்று ஏ.டி.எம்.களில் நிரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
ரூ.5 கோடி
பணம் கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள், கண்காணிப்புகேமிரா, ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவை ரூ.5 கோடிக்கு அதிகமான பணத்தை மட்டுமே கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும்.
பணம் கொண்டு செல்லும் ஒவ்வொரு வாகனத்திலும் இரு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருக்க வேண்டும், கொள்ளை தாக்குதல் நடக்கும் நேரத்தில் வாகனத்ைத பாதுகாப்பாக கொண்டு செல்ல ஓட்டுநருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். மேலும், ஏ.டி.எம். அதிகாரிகள் இருவர் இருத்தல் வேண்டும்.
பணம் நிரப்ப பயன்படுத்தப்படும் வாகனம் ஒவ்வொரு முறையும் ரூ. 5 கோடிக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது.
பலத்த பாதுகாப்பு
பணம் கொண்டு செல்லப்படும் வாகனத்தில் இரு அறைகள் இருக்க வேண்டும். ஒரு அறை பணம் வைத்திருக்க பிரத்யேகமாக ஸ்டீல் தகட்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதில் பொருத்தப்பட்ட பூட்டுகள் மிகுந்த பாதுகாப்பாகவும் அல்லது மின்னணு பாதுகாப்பு பெட்டமாகஇருத்தல் வேண்டும்.
ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்படும் வாகனத்துக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு நிறுவனங்கள் சான்றிதழ் பெற்றவையாக, அரசால் அங்கீகரிக்கப்பட்டவையாக, அனுபவம் கொண்டவையாக இருத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.