
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரிக்குச் செல்லும் டிரக் ஒன்று, பாலத்தில் சென்ற போது, டிரக்கின் பளுவைத் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது கங்கோத்ரி. இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப் படும் கங்கோத்ரியில் தான், புனித கங்கை பிறக்கிறது. எனவே மிக முக்கியமான மலைப் பாதையாகத் திகழ்கிறது இந்தப் பாதை. கடந்த 2013 ஆம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தின் போது, இந்தப் பாதையில் கட்டப்பட்ட ஆற்றுப் பாலம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து போனது. இதனால், எல்லைப்புற சாலை அமைப்பு தாற்காலிகமாக இரும்பினால் ஆன உடனடி பாலம் ஒன்றை அமைத்து, போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தது.
இந்நிலையில், உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி செல்லும் வழியில் உள்ள இந்த ஆற்றுப் பாலத்தில் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டிரக் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரக்கின் பளுவைத் தாங்காமல், இந்தப் பாலம் உடைந்து விழுந்தது.
இதை அடுத்து இந்தச் சாலை மூடப்பட்டது. இதனால், புனிதத் தலமான கங்கோத்ரிக்குச் செல்லும் யாத்ரீகர்கள் பாதிக்கப்பட்டனர். இது குளிர்காலம் என்பதால், யாத்ரீகர்களின் வருகை அதிகம் இருக்காது என்றபோதிலும், கங்கோத்ரி, மானேரி, ஹர்சில் ஆகிய மலைப் பகுதிகள் மற்றும் ஏராளமான மலை கிராமங்கள் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.