
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் லவ்ஜிஹாத்தில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டு, முகமது அப்ரசூல் என்ற கூலித் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார். அவரை, ஷம்புலால் ரேகர் என்பவர் கோடாரியால் வெட்டி, மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை செய்தார். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூகத் தளங்களில் உலாவந்தது.
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து ஷம்புலால் ரேகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஷம்புலால் ரேகரின் மனைவி சீதாவின் வங்கிக் கணக்கில் ரூ.2.75 லட்சம் பணம் நன்கொடையாகச் சேர்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், அந்த வங்கிக் கணக்கை முடக்கினர்.
ராஜஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து 516 பேர் 'நெட்பேங்கிங்’ மூலமாக நன்கொடையாக அனுப்பியுள்ளனர். இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்ட தொகைக்கான ரசீது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து போலீஸார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு கேட்டுக் கொண்டு, ஷம்புலாலின் வழக்குச் செலவுக்காக பணம் அனுப்புமாறு வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்த இரண்டு வியாபாரிகளை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சமூக வலைதளத்தில் ஷம்புலால் ரேகருக்கு ஆதரவு தெரிவித்து பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.