"இனி அரசியல் கட்சிகள் நன்கொடை பெற முடியாது" - மோடியின் அடுத்த அதிரடி

First Published Dec 18, 2016, 4:32 PM IST
Highlights


தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதைத் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகள் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் பெறும் நன்கொடைக்கு தடை விதித்து சட்டத்திருத்தம் கொண்ட வரப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விரைவில் மத்தியஅரசு முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலக்கு

இப்போதுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து பெறும் நன்கொடைக்கு ரசீது அளிக்க வேண்டும் என்ற அரசியல் சட்ட விதிமுறை கிடையாது. அதே சமயம், 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 29சி படி,  அடையாளம் தெரியாத நபர்கள் அளிக்கும் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமான நன்கொடைக்கு ரசீது அளிக்கப்பட வேண்டும்.

கடிதம்

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு சில தேர்தல் சீர்திருத்த விதிமுறைகள் திருத்தம் குறித்து கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “ அடையாளம் தெரியாத நபர்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை ரூ.2 ஆயிரம் அல்லது அல்லது அதற்கு அதிகமாக இருந்தாலே தடை செய்யப்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளது.

அதாவது, இப்போது நடைமுறையில் இருக்கும் ரூ. 20 ஆயிரம் வர அடையாளம் தெரியாத நபர்கள் அளிக்கும் நன்கொடையை ரசீது இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் அளவை ரூ.2 ஆயிரமாக குறைக்க தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

மத்தியஅரசு

ஆனால்,  மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில்,“ அரசியல் கட்சிகள் தங்களிடம் இருக்கும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யத் தடையில்லை. இதற்கு வரி விதிக்கப்படாது.அதேசமயம், ரூ. 20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்'' என்பது குறிப்பிடத்தக்கது.

வரிவிலக்கு

இந்நிலையில், தேர்தல் ஆணையம் இப்படி ஒரு கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்துள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிட்டு சட்டபேரவை அல்லது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு மட்டுமே வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

மேலும், கடந்த 1996-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து அரசியல் கட்சிகளும், தாங்கள் பெறும் நன்கொடைக்கான அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.

விவரங்கள் அவசியம்

அரசியல் கட்சிகள் பெறும் சிறிய நன்கொடையான ரூ.10, ரூ.20 மதிப்புகளுக்கு கூப்பன்கள், நன்கொடையாளர்கள் பெயர் பதியப்படுவதில்லை. ஆனால், இந்த சிறிய தொகைதான் பெரிய அளவாக மாறி, கருப்பு பணமாக மாறுகிறது. ஆதலால், அனைத்தையும் கணக்கில் கொண்டு வந்து, வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

click me!