
பெங்களூரு சிவாஜிநகரை அடுத்த இண்டியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிள் பகுதியில் ரூ.5 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சிலர் கொண்டு செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனபோது, அதில் ரூ.5.2 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் இருந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். டிரைவர் அதிகாரிகளை பார்த்ததும் காரில் இருந்து குதித்து தப்பிவிட்டார்.
பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரித்தபோது, 2 பேரும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பெங்களூரு மற்றும் ஆந்திராவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பணம், தொழிலில் முதலீடு செய்வதற்காக எடுத்து செல்வதாகவும் கூறினர்.
ஆனால் அதிகாரிகளுக்கு, அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, 2 பேரையும் தனித்தனியாக ரகசிய அறைகளில் வைத்து விசாரிக்கின்றனர்.
தப்பியோடிய கார் டிரைவர் ரூ.22 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றது தெரிந்தது. அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இதேபோல், சண்டிகாரில் துணிக்கடை அதிபர் இந்தர்பால் மகாஜன் வீடு மற்றும் கடையில் கடந்த டிசம்பர் 14ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 2.19 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.17.74 லட்சம், புதிய 2000 ரூபாய் நோட்டுகள். அவருக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக மொகாலியில் உள்ள தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் மொகாலியில் உள்ள பிரபல டெய்லருக்கும் பழைய ரூபாய் நோட்டை மாற்றிக் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து மகாராஜா டெய்லர் என்ற அவரது கடையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கு ரூ.30 லட்சம் மற்றும் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ.18 லட்சம், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
மேலும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 பேரிடம் இருந்து 4.4 லட்சம் மதிப்பில் புதிய 2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.