ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமே இல்லை... ஓ.பி.ரவாத் திட்டவட்டம்!

By vinoth kumarFirst Published Aug 24, 2018, 12:13 PM IST
Highlights

ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ரவாத் கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ரவாத் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க உள்ள மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளன. மக்களவைக்கு அடுத்தாண்டு ஏப்ரலிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளன. 

செலவைக் குறைக்கும் வகையில் பாஜக ஒரு புதிய யோசனையை வகுத்துள்ளது. அனைத்து மாநில சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது திட்டம் கிடையாது அது ஒரு கொள்கை என்று குறிப்பிட்டு 8 பக்கங்கள் கொண்ட விரிவான கடித்தத்தை சட்ட ஆணையத்துக்கு இம்மாத தொடக்கத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா அனுப்பியிருந்தார். 

தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளும் ஆரோக்கியமான விவாதம் நடத்த வேண்டும் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அவர் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை, மக்களவைக்கு தேர்தல் நடத்த எந்த சாத்தியமும் இல்லை. இதற்கான சட்டத்தை கொண்டு வர குறைந்தது ஒராண்டு ஆகும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமே இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!