
ஏசி வகுப்பு பயணிகளுக்கு போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில்களில் ஏ.சி. வகுப்பில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் போர்வைகளும், படுக்கை விரிப்புகளும் மிகவும் அசுத்தமாக இருப்பதாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை (சி.ஏ.ஜி.) அதிகாரி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது ரயில் பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.
இதனைத் தொடர்ந்து, ரயில்களில் ஏ.சி. வகுப்புப் பயணிகளுக்கு போர்வைகள் வழங்குவதை நிறுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, ஜம்மு மெயில்; அதிவிரைவு ரயிலின் ஏ.சி. வகுப்புகளில் போர்வைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏ.சி. வகுப்புகளில் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் அவர்களுக்கு போர்வை தேவையா, இல்லையா என்ற விவரத்தைக் கேட்டறிய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களைப் பொருத்து, மற்ற ரயில்களுக்கும் இத்தகைய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சகம் முடிவெடுக்கும்.
ஏ.சி. வகுப்புகளுக்கு போர்வை விநியோகம் நிறுத்தப்படும் அதே நேரத்தில், அந்தப் பெட்டிகளில் குளிர் சீரான அளவுக்கு இருப்பது உறுதி செய்யப்படும். இதனால், பயணிகள் குளிருக்காக போர்வையை உபயோகிக்கும் தேவை ஏற்படாது என அந்த அதிகாரி தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக டெல்லி -ஜம்மு ரயிலில் தற்போது 19 டிகிரி இருக்கும் வெப்ப நிலையை 24 முதல் 26 வரை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால், பயணிகள் போர்வை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.