
குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பமில்லை என்பதை பதிவு செய்வதற்கான நோட்டாவை பயன்படுத்துவதற்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் வருகிற 8-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்தும், மிரட்டியும் பாரதிய ஜனதா கட்சி தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கூறி, 44 எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் காங்கிரஸ் கட்சி தங்க வைத்துள்ளது.
இந்நிலையில் குஜராத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தனது வாக்கு யாருக்கும் இல்லை என்பதை பதிவு செய்ய `நோட்டா' வாய்ப்பு பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,
இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் நோட்டா தேர்வு வாய்ப்பை பயன்படுத்த அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் வாதிட்டார்.
மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்துவது குறித்து அரசியல் சாசனத்தில் சட்ட விதிமுறை எதுவும் இல்லை என அவர் வாதிட்டார். இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வாதங்களுக்குப் பின்னர் நோட்டா தொடர்பான இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.