அம்மா உணவகம் போல், பெங்களூரில் ‘நம்ம அப்பாஜி கேண்டீன்’...

First Published Aug 2, 2017, 7:14 PM IST
Highlights
namma appaji canteen open in bangalore...


தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் போல், கர்நாடக மாநிலம், பெங்களூரில் ‘ நம்ம அப்பாஜி கேண்டீன்’ என்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கேண்டீனை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மேலவை உறுப்பினர் டி.ஏ. சரவணன் இதைத் தொடங்கியுள்ளார். இந்த கேண்டீனின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளபேனரில் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச். தேவே கவுடாவின் புகைப்படத்தோடு வடிவமைத்துள்ளார்.

பெங்களூரின் தெற்கு பகுதியில் உள்ள ஹனுமந்தநகரில் இந்த ‘நம்ம அப்பாஜி கேண்டீன்’ நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த கேண்டீனை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர தேவே கவுடா திறந்து வைத்தார். உடன் அவரின் மனைவி சென்னம்மா, மகனும் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, நஞ்சவதூத சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.முதல்நாளான நேற்று கேண்டீனில் அனைவருக்கும்  இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

‘நம்ம அப்பாஜி கேண்டீனில்’ காலை உணவும், மதிய உணவு மட்டும் வழங்கப்படும். இங்கு டீ, காபி 3 ரூபாய்க்கும், காலை உணவாக காராபாத், கேசரிபாத், இட்லி, வடை, ராகி உப்புமா ஆகிய தலா 5ருபாய்க்கும், மதிய உணவு 10 ரூபாய்க்கும் வழங்கப்படும். காலை 7.30 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12.30 மணி முதல் 2.30 வரையிலும் உணவு வழங்கப்படும்.

இது குறித்து மேலவை உறுப்பினரும், நகைக்கடை நடத்தி வருபவருமான டி.ஏ.ஷரவணா கூறுகையில், “ நம்ம அப்பாஜி கேண்டீன்’ நேற்று திறக்கப்பட்டது. ஒருமாதம் மக்களின் மனநிலையை அறிந்தபின், அதிகமான கடைகள் இது போல் திறக்கப்படும். இது போல் 27 கடைகள் பெங்களூரு நகரில் திறக்க திட்டமிட்டுள்ளேன். அனைத்து தரப்பினருக்கும் உணவு கிடைக்கவே இந்த திட்டம்’’ என்றார்.

click me!