மக்களவை தேர்தல் 2024: முதல் ஆளாய் வேட்பாளரை அறிவித்த நிதிஷ்குமார்; கூட்டணிக்குள் புகைச்சல்!

By Manikanda Prabu  |  First Published Jan 3, 2024, 6:12 PM IST

அருணாச்சலப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளரை முதல் ஆளாய் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக  எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தியா கூட்டணி என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளது. அண்மையில் நடைபெற்ற இக்கூட்டணியின் 4ஆவது ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிப்பது பற்றி பேசப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளரை முதல் ஆளாய் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். ஐந்து மாநில தேர்தலின் போது, சமாஜ்வாதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசல் நிலவி வந்தது. அதன் தொடர்ச்சியாக, அந்த உரசல் சரி செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் விவாதிக்காமல் 2024 தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை பீகார் முதல் நிதிஷ் குமார் அறிவித்துள்ளதாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

ஏற்கனவே ஆம் ஆத்மி, திரிணாமூல் ஆகிய கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், அந்த வரிசையில் நிதிஷ் குமாரும் இணைந்துள்ளது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அண்மையில், பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிய, அதனை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்றுக் கொண்டது, நிதிஷ்குமாரை அதிருப்தியில் ஆழ்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை அவர் மறுத்திருந்தார் என்பது இங்கு  கவனிக்கத்தக்கது.

இந்த பின்னணியில், அருணாச்சலப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளரை முதல் ஆளாய் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய தலைவராக இரு தினங்களுக்கு முன்னர் அவர் பொறுப்பேற்ற நிலையில், இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

“ஐக்கிய ஜனதா தளத்தின் அருணாச்சல பிரதேச மாநிலத் தலைவர் ருஹி டாங்குங், நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சார்பில் 1.அருணாச்சல் மேற்கு தொகுதியில் போட்டியிடுவார்.” என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடும். கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் அறிவுறுத்தலின்படி, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை சதி: ஆம் ஆத்மி பரப்ரப்பு குற்றாச்சாட்டு!

முன்னதாக, ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவராக கடந்த வாரம் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட நிதிஷ்குமார், இந்திய கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு செயல்முறையைத் தொடங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமிக்க காங்கிரஸ் பரிசீலிக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, சாதி வாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து விவாதிக்காமல் காங்கிரஸ் கட்சி பொதுவெளியில் பேசுவதாக நிதிஷ் குமார் குற்றம் சாட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, அருணாச்சலப் பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளரை முதல் ஆளாய் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் காங்கிரஸ் கட்சியிடம் அவர் விவாதிக்கவில்லை என தெரிகிறது.

click me!