முதலில் அப்படி தான் இருக்கும்.. சாதாரணமான ஜலதோஷம் என்று நினைக்க வேண்டாம்..எச்சரிக்கும் மருத்துவர்..

By Thanalakshmi VFirst Published Jan 13, 2022, 8:10 PM IST
Highlights

கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் தொற்றை சாதாரண ஜலதோஷம் போன்று கருத வேண்டாம், அதை எளிதாக எடுக்கவேண்டாம் என்று நிதி ஆயோக்கின் மருத்துவக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து, 3வது அலை வீரியமடைந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் கொரோனாவில் பாதி்க்கப்பட்டு வருகிறார்கள். ஒமைக்ரான் பாதிப்பும் 4 ஆயிரத்துக்கும்மேல் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நிதி ஆயோக்கின் மருத்துவக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அதிவேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸுக்கு மாற்றாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸை சாதாரண ஜலதோஷம் போன்று நினைக்க வேண்டாம். இயல்பாக பெருந்தொற்று தன்னை விரிவுபடுத்தவும், உருமாற்றம் அடையவும் நீண்டகாலம் எடுக்கும். ஆனால், இந்த முறை விரைவாக இருக்கிறது, அதற்கு காரணம் பரவல் வேகம் அதிகரிப்புதான் அதனால்தான் கொரோனாவில் பாதி்க்கப்பட்டு பாசிட்டிவ் ஆகும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 25 சதவீதம், 30 சதவீதம், 60 சதவீதம் வரை பாசிட்டிவ் விகிதம் என நகர்ப்புறங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் 11சதவீதம் பாசிட்டிவ் வீதம் இருக்கிறது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் வீதம் குறைவாக இருக்கிறது, ஆனால், பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார்.

மேலும் பேசிய அவர், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதால், பரவும்வேகம் குறையும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்து, தொற்றைக் குறைப்பது ஒவ்வொருவரின் சமூகக் கடமை. ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும், தகுதியானவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசிதான் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு அளி்க்கும் என்றார்.

மேலும் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று 2 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,47,417 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை சுகாதாரத்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த அறிவுறுத்தினார். இதனையடுத்து இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா , நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் பங்கேற்றனர்.

click me!