#Breaking: தடுப்பூசி தான் ஒரே வழி..மக்கள் பதற்றமடையாமல் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

By Thanalakshmi VFirst Published Jan 13, 2022, 7:02 PM IST
Highlights

முந்தைய தொற்றுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. எனவே நாம் பதற்றமடையாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி தான் மிகபெரிய ஆயுதம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்திய பிரதமர் மோடி, மாவட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு உறுதிபடுத்தவும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கான தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றவும் அறிவுறுத்தினார்.இந்நிலையில் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து வியாழக்கிழமை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியானது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும், கொரோனா தடுப்பு பணிகளின் நிலை குறித்தும் பிரதமர் கலந்தாலோசிப்பார் என்றும் அதனுடன், சிறார்களுக்கு தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் உள்ளிட்ட தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்துவது குறித்தும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் தலைமையிலான அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுபடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முழு முயற்சியுடன் எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் பிரதமர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று தடுக்கும் போரில் சுகாதாரத்துறை, காவல்துறை , உள்ளாட்சி அமைப்புகள்,மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

முந்தைய தொற்றுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. எனவே நாம் பதற்றமடையாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்கலாம் என்று மாநில முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட தடுப்பூசிகள் சிறந்த ஆயுதம் என்று வலியுறுத்திய அவர், நாட்டில் 92% பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளை தடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்தியாவில் ஏறக்குறைய தினசரி கொரோனா பாதிப்பு 2.5 லட்சம் நெருங்கியுள்ளது. மாநிலங்களில் கொரோனா கட்டுபாடுகள் சாதாரண மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

தடுப்பூசி செலுத்தும் பணி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கைகள், கொரோனா நிவாரண நிதிஉதவிகள், பொருளாதார மீட்பு நடவடிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் முதன் முறையாக அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமர் மோடி காணொலி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

 


 

| We need to counter rumours about vaccination like "getting Covid despite vaccination, what's its use"...: PM Modi during the meeting on COVID with states pic.twitter.com/fUr0X2by6P

— ANI (@ANI)
click me!