
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக ரோஸ்கர் மேளா எனும் வேலைவாய்ப்பு திருவிழாவை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் 9ஆவது கட்டமாக நடைபெற்ற ரோஸ்கர் மேளாவில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்படும் சுமார் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வழங்கினார்.
புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பணிகளில் சேருவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையில் 156 பேருக்கும், கோவையில் 158 பேருக்கும், மதுரையில் 229 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னையில் நடந்த மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 553 நபர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் விண்னப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது; வட்டாள் நாகராஜை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!
தொடர்ந்து பேசிய அவர், “இந்த வேலை வாய்ப்பு தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வு அடிப்படையிலானது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பிப்பதால் காலி பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகின்றனர். வெளிமாநிலத்தவர்கள் இங்கு அதிக அளவில் வருவதற்கு காரணம் அவர்கள் அதிக அளவில் போட்டி தேர்வை சந்திக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய அரசின் காலி பணியிடங்களுக்கு தேர்வை எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேலும், வெளிமாநிலங்களில் பணி பெறுபவர்கள் அந்த மாநிலங்களில் உள்ள மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த பணிக்கு, எந்த ஊருக்கு செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.