
தேசத்தின் பிரதமர் மோடிக்கு அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் ஊர்வலம் சென்று பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்தது மாநில போலீஸ். விளைவு, தடாலடியாக 3 கோடி ரூபாய் செலவில் ‘ஸீ பிளேன்’ எனப்படும் மிதக்கும் விமானத்தில் வந்திறங்கி சபர்மதி நதியிலிருந்தபடி பிரச்சாரம் செய்தார் மோடி. நாடெங்கும் இப்போது இந்தப் பிரச்சாரத்தின் ஹிட் பற்றித்தான் அலையடிக்கிறது.
ஆனால் இந்த இரைச்சலின் நடுவே ஒரு வருத்தக் குரலும் துருத்திக் கொண்டு தெரிகிறது. அது டில்லி நிர்பயாவின் அம்மாவின் துக்கமே!
கடந்த 2012ம் வருடம் டிசம்பர் மாதம் டில்லியில் மாணவி நிர்பயா, ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இறந்தார்.
உலகையே இந்தியாவை நோக்கி அச்சத்துடன் திரும்பிப் பார்க்க வைத்த வழக்கு இது. இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்ய, மற்றொருவன் சிறார் நீதிமன்றத்தில் சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட, மீதி நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் அப்பில் செய்துள்ளனர்.
இந்நிலையில் நிர்பயாவின் தாய் ஆஷா “ஐந்தாண்டுகள் கடந்துவிட்டது என் உயிர் மகள் இறந்து. ஆனால் அவளை குரூரம் செய்தவர்கள் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறார்கள். உரிய நேரத்தில் நீதி கிடைக்காவிட்டால் சட்டத்தின் மீது மக்களுக்கு பயம் போய்விடுமே!
நிர்பயா சம்பவத்துக்குப் பின் பஸ் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமெராக்கள் பொருத்துவதாக சொல்லினார்கள். ஆனால் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் தண்ணீர் எழுத்துக்கள் கூட அல்ல, காற்றில் எழுதிய எழுத்துக்களே. என்றுமே நிறைவேறுவதில்லை.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் துளியளவு கூட முன்னேற்றமில்லை. அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
என் மகளின் இழப்பைக் காட்டி நான் எங்களுக்கு நிவாரணம் கேட்கவில்லை, நிதியுதவி கேட்கவில்லை எங்கள் தங்கத்தின் சீரழிப்புக்கு நியாயம் கேட்கிறேன், நீதி வேண்டுகிறேன். இரண்டு ஆண்டுகளாகியும் நிர்பயாவின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீளா நிலையில் நிலுவையில் உள்ளது. நிர்பயாவின் ஆன்மா சாந்தியடைவது எப்போது?” என்று கண்ணீர் வடித்திருக்கிறார்.
சர்வதேச வல்லமை படைத்த தேச பிரதமர் மோடி ஸீ பிளேனில் பறந்து முடிந்த சாகசத்தை விட, நிர்பயாவின் ஆன்மாவை நாளைக்கே சாந்தியடைய வைத்தால் உலகம் அவரை வாழ்த்தும்!