
துபாய் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியிடம் போராடி வீழ்ந்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
முன்னிலை
உலகின் முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டிகள் துபாயில் தொடங்கியது. பெண்கள் பிரிவில் முதலில் நடைபெற்ற மூன்று லீக் போட்டிகளிலும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அபாரமாக விளையாடி, அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.
அதே சமயம் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில், உலக சூப்பர் சீரிஸ் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சிந்து, உலகத் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை எதிர்கொண்டார்.
தோல்வி
முதல் செட்டில் சிந்து அபாரமாக விளையாடினார். இதனால் அவர் 21-15 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் இருந்து முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்து ஆடியட ஜப்பான் வீராங்கனை அதிரடியாக விளையாடி இரண்டாவது செட்டை 21-12 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.
சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் ஆட்டம் இறுதிவரை பரபரப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் 19-19 என ஆட்டம் சமனில் இருந்தது. அதன்பின் ஜப்பான் வீராங்கனை தொடர்ந்து இரண்டு புள்ளிகள் எடுத்து 21-19 என்ற புள்ளிக்கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றினார்.
இதன்முலம் 15-21, 21-12, 21-19 என்ற செட்களில் வென்ற ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த ஆட்டம் ஒரு மணிநேரம் 31 நிமிடங்கள் நடந்தது.