
உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் நகரில் உள்ள கிறிஸ்துவ பள்ளிகள், மாணவர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடக்கூடாது. அவ்வாறு கொண்டாடுவது மதத்தை பரப்பும் செயல் என்று இந்து ஜாக்ரன் மான்ஞ் எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பு, முதல்வர் ஆதித்யநாத்தின் இந்து யுவா வாகனியின் ஆதரவு பெற்ற அமைப்பாகும்.
மதமாற்றம்
அலிகார் நகரில் ஏராளமான கிறிஸ்துவ பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் இந்து மாணவர்களும் படித்து வருகிறார்கள். அந்த மாணவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடச் செய்து, அவர்களை கிறிஸ்துவ மதத்துக்கு கட்டாய மதமாற்றும் செய்யும் செயலில் பள்ளிக்கூடங்கள் ஈடுபடுகின்றன என இந்து ஜார்கன் மான்ஞ் அமைப்பு சந்தேகப்பட்டது.
மனநிலையை பாதிக்கும்
இது குறித்து இந்து ஜார்கன் மான்ஞ் அமைப்பின் நகர தலைவர் சோனி சவிதா, ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ மாணவர்களுக்கு சிறிய பொம்மைகளையும், பரிசுகளையும் கொடுத்து, அவர்களை எளிதாக கிறிஸ்துவ மதத்துவ மாற்றத் தூண்டும் பணியை கிறிஸ்துவ பள்ளிகள் செய்கின்றன என எங்களுக்கு புகார்கள் வந்தன. இது இந்து மாணவர்களின் மனநிலையை பாதிக்கும். இதனால், மாணவர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாடக்கூடாது எனத் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.
பாதிரியார் கார் உடைப்பு
இதற்கிடையை மத்தியப் பிரதேசம், சத்னா மாவட்டத்தில், கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் மக்களை மதம் மாற்றம் செய்கிறார் எனக் கூறி பாதிரியாரின் காரை போலீஸ் நிலையத்துக்கு அருகே பஜ்ரங் தல் அமைப்பினர் சமீபத்தில் அடித்து நொறுக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் இப்படி ஒரு மிரட்டல் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு, இதேபோல், கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை தேவாலாயத்துக்கு வெளியே கொண்டாடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தவர் தற்போது முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.