இரவு ஊரடங்கு ரத்து.. வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு.. கர்நாடக அரசு அதிரடி

By Thanalakshmi VFirst Published Jan 29, 2022, 6:52 PM IST
Highlights

கர்நாடக மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
 

கர்நாடக மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அங்கு தொற்று பாதித்து மருத்துவமனையில் சேருவோர் விகிதமும் 2 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 31 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ள மாநில அரசு, இரவு நேர ஊரடங்கையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தொற்று காரணமாக, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம், டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து, இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. ஓட்டல்கள், பார்கள், கிளப்கள், பப்புகள் உள்ளிட்டவை 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். எனினும், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. மத வழிபாட்டு தலங்களில் 50 சதவீத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பேரணி, போராட்டம், மதம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!