கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறித்தான புதிய விதிமுறை..எஸ்.பி.ஐ யின் புதிய திருத்தம் ரத்து..

By Thanalakshmi VFirst Published Jan 29, 2022, 5:44 PM IST
Highlights

3 மாதங்களுக்கு மேல் கருவுற்ற பெண்களுக்கு பணி நியமனம் இல்லை என்ற உத்தரவை எஸ்.பி.ஐ. வங்கி ரத்து செய்துள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கியில், புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் அண்மையில் வெளியிட்டிருந்தது. மருத்துவ தகுதி தொடர்பான அந்த சுற்றறிக்கையில், மூன்று மாதத்திற்கு மேல் கருவுற்ற பெண்கள் பணியில் சேர தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இது போன்றவர்கள் குழந்தை பெற்ற பின் 4 மாதம் கழித்தே பணியில் சேர தகுதியுள்ளவர்கள் என்றும் புதிய விதிகளில் குறிப்பிட்டிருந்தது. பதவி உயர்விற்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த விதிகள் பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இவ்விதிகள்அனைவருக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர். இவ்விதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன எஸ் பி ஐ.யின் இந்த விதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு டெல்லி மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 3 மாத கர்ப்பிணிகளை பணியில் சேரவிடாமல் தடுத்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் “கர்ப்பிணிப் பெண்களுக்கான நியமனம் தொடர்பான அறிவுறுத்தலை எஸ்பிஐ திருத்தியுள்ளது.3 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பணியில் நியமிக்கப்பட மாட்டார்கள். பிரசவம் முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த திருத்தப்பட்ட வழிக்காட்டுதல் பாகுப்பாடு நிறைந்தது என்று தெரிவித்துள்ளது.

மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் எஸ்.பி.ஐ.க்கு எதிராக பொங்கியெழுந்தார். இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி நீண்ட நேரம் விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் கண்டனங்கள் குவிந்தன. ஆனால், கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் 3 மாதத்திற்கு மேல் கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவை எஸ்.பி.ஐ. வாபஸ் பெற்றுள்ளது. தனது உத்தரவை எஸ்.பி.ஐ. வங்கி ரத்து செய்திருக்கிறது.

click me!