மனிதக் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
மனித கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் பொருட்டு நாடு தழுவிய சோதனையை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), மியான்மர் நாட்டை சேர்ந்த ஒருவரை ஜம்முவில் கைது செய்துள்ளது.
மனித கடத்தல் வழக்குகள் தொடர்பாக எட்டு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் சோதனை நடத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த சோதனையின் போது மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் பதிண்டி பகுதியில் வசித்து வந்த ஜாபர் ஆலம் என்பவரை அவரது வீட்டில் வைத்து அதிகாலை 2 மணிக்கு கைது செய்ததாகவும், மற்றொருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாஸ்போர்ட் சட்டத்தை மீறுதல் மற்றும் மனித கடத்தல் வழக்குகள் தொடர்பாக மியான்மர் குடியேற்றவாசிகள் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் மட்டும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அர்ச்சகர் நியமன அரசாணைக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம் உத்தரவு
அதேபோல், தமிழகத்தில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி போலி ஆதார் அடையாள அட்டை வைத்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் அகதி ஒருவர் உட்பட 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை, சென்னை புறநகர் மற்றும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர், பள்ளிக்கரணை, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது.
படப்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சகாபுதீனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததை அடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 2 மாதங்களாக அங்கு தங்கியிருக்கும் அவரது வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலி ஆதார் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல், சென்னை மதராசா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முன்னா மற்றும் அவரது ரூம்மேட்டை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட 3 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திரிபுராவை சேர்ந்தவர்கள் என போலி ஆதார் அட்டை தயாரித்து சென்னையில் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலி ஆதார் அட்டை தயாரித்து வேலை கொடுத்த சாஹித் உஷான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் புதுச்சேரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.