பாஜக எம்.பி.யும் தனது தம்பியுமான வருண் காந்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மூன்று நாட்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் உள்ளார். இந்த நிலையில், அவரது தம்பியும் உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.பி.யுமான வருண் காந்தி கேதார்நாத்தில் உள்ள சிவன் கோயிலில் நேற்று தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அந்த சமயத்தில் கோயிலில் பிரார்த்தனைக்காக சென்றிருந்த ராகுல் காந்தியும், வருண் காந்தியும் ஒருவரையொருவர் சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினர்.
பொது இடங்களில் அரிதாகவே ஒன்றாகக் காணப்படும் இவர்கள் இருவருக்கும் இடையேயான சந்திப்பு வருண் காந்தியின் அரசியல் எதிர்காலம் குறித்து சில ஊகங்களைத் தூண்டியுள்ளது.
ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியின் மூத்த சகோதர் சஞ்சய் காந்தி - மேனகா காந்தி தம்பதியின் மகனான வருண் காந்தி சமீபத்திய மாதங்களில் பாஜகவின் முக்கிய கூட்டங்களில் தென்படுவதில்லை. பாஜகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறிய வருண் காந்தியும், அவரது தாயார் மேனகா காந்தியும் கட்சி மேலிடத்தால் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், ராகுலுடனான வருணின் சந்திப்பு அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.
ராகுலும், வருணும் கேதார்நாத் கோயிலுக்கு வெளியே சிறிது நேரம் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவும் பேசப்படவில்லை என்றும் அத்தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், மிகவும் குறுகிய நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
வருணின் மகளை சந்தித்ததில் ராகுல் காந்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ராகுலும், வருணும் சந்தித்துக் கொள்ளாவிட்டாலும், இருவருக்கும் இடையே நல்லுறவு இருப்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த ஆண்டில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம், காங்கிரசுக்கு வருண் காந்தி வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “காங்கிரசுக்கு யார் வந்தாலும் வரவேற்போம்; காங்கிரஸ் எதிர்த்து போராடும் பாஜக/ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர் வருன்.” என்றார்.
அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்: கொந்தளித்த ஜோதிமணி!
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் வருண் காந்தி. வருண் காந்தியின் பிலிபிட் மக்களவைத் தொகுதி ஒருகாலத்தில் அவரது தாயாரான மேனகா காந்தி வசம் இருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் பிலிபிட் மக்களவைத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தேர்தல் அரசியலில் வருண் காந்தி இறங்கினார். அவரது தாயார் மேனகா காந்தி தற்போது சுல்தான்பூர் எம்.பி.யாக உள்ளார்.
ஆனால், அண்மைக்காலமாகவே விவசாயிகள் துயரம், வேளான் மசோதா, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உள்ளிட்ட பல பிரச்சினைகளில் சொந்தக் கட்சியான பாஜகவை கடுமையான விமர்சித்திருவர்களில் வருண் காந்தியும் ஒருவர். ஆனால், வருண் காந்திக்கு எதிராக கட்சி எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும், அவரது செயல்பாடுகளை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அதேசமயம், 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்.பி.யான வருண் காந்திக்கு சீட் மறுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அண்மைக்காலமாகவே தேசிய பிரச்சினைகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் வருண் காந்தி பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை என்றாலும், அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை. கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து வருண் காந்தியும், அவரது தாயார் மேனகா காந்தியும் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.