எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ‘அம்பேத்கரின் பேரன்’? இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!!!

First Published Jun 21, 2017, 7:52 PM IST
Highlights
Will the opposition Next President of India now pick Dr Ambedkars grandson


ஜூலை 17-ந்தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின்பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரகாஷ் அம்பேத்கர் நிறுத்தப்பட வாய்ப்புகள்  உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

17-ந்தேதி தேர்தல்

ஜூலை 24-ந் தேதியோடு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவிக்கைவௌியிட்டது.  அதன்படி, வேட்புமனுத்தாக்கல், கடந்த 14-ந் தேதி தொடங்கியது. வரும் 28ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 30-ந் தேதி மனு பரிசீலனை நடக்க உள்ளது.

தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஜூலை 17-ந் தேதி தேர்தலும், 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

பீகார் ஆளுநர்

இதற்கிடையே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி, ஜனாதிபதி தேர்தலில் தங்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம் நாத் கோவிந்தை கடந்த 2 நாட்களுக்கு முன் அறிவித்தது.

ஆதரவு பெருகிறது

தலித் சமூகத்தை சேர்ந்த ராம் நாத் கோவிந்துக்கு பா.ஜனதா கூட்டணி கட்சிகளும், தெலங்கானாராஷ்ட்ரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். ரெட்டி காங்கிரஸ், சிவசேனா, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதனால், ஏறக்குறைய வெற்றிக்கு போதுமான பெரும்பான்மை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆலோசனை

அதேசமயம், எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் களத்தில் இறங்கக்கூடும். டெல்லியில் இன்று மாலை கூடும் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்து தங்களின் வேட்பாளரை முடிவு செய்ய உள்ளன.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்பாளர்கள் எனத் தெரிகிறது.

வி.ஐ.பி.கள் பெயர்கள்

இதற்கிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்து பல்வேறு முக்கிய வி.ஐ.பி.க்கள் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. அதில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

தலித் தலைவர்

ஆனால், பா.ஜனதா கூட்டணி சார்பில் ஒரு தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால், அவருக்கு சமமான போட்டி அளிக்கக் கூடிய வகையில், மிகப்பிரபலமான பின்புலம் கொண்ட, ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைவரையை எதிர்க்கட்சிகள் நிறுத்தலாம் எனத் தெரிகிறது.

அம்பேத்கர் பேரன்?

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசிய ஜனநாயக் கூட்டணி அல்லாத கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை நடத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில், டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பெயரையே எதிர்க்கட்சிகள் முன்மொழியும். காங்கிரஸ் கட்சியும், மற்ற கட்சிகளும் ஏற்றுக்கொண்டால்,  பிரகாஷ் அம்பேத்கர் நிறுத்தப்படுவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

63 வயதான பிராகஷ் அம்பேத்கர் மஹாரஷ்டிரா மாநிலம், அகோலா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!