புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றிக் கொடுத்து சிக்கிய ரிசர்வ் பேங்க் அதிகாரிகள்….வருமானவரித்துறை அதிரடி

First Published Dec 18, 2016, 8:11 AM IST
Highlights


புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மாற்றிக் கொடுத்து சிக்கிய ரிசர்வ் பேங்க் அதிகாரிகள்….வருமானவரித்துறை அதிரடி

500 மற்றும்  1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் பணம் எடுப்பதற்காக  வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும்  நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்தாலும் சில நேரங்களில் பணம் கிடைப்பதில்லை. அதுவும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடிகிறது

ஏழை எளிய மக்கள் இப்படி வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்க ஒரு சிலர், வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை எளிதில் மாற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக வருமான வரித்துறை தற்போது தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு சோதனையின்போது தான் முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாயை மாற்றிக் கொடுத்த 2 ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியில் அதிகாரிகளாக பணியாற்றும் சதானந்த நாயக், ஏ.கே.கவின் ஆகியோர் 1 கோடியே 99 லட்சத்துக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றி கொடுத்தது சோதனையின்போது தெரியவந்தது.

இதையடுத்து இவர்கள் மீது குற்றச்சதி, மோசடி, லஞ்ச ஒழிப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதேபோன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு வங்கி காசாளர் பரசிவமூர்த்தி 1 கோடியே 51 லட்சத்திற்கு  பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்கி கமிஷன் அடிப்படையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்ததாக தெரிய வந்தது.

 இது போன்ற முறைகேடுகளை மத்திய அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

 

click me!