
சர்வதேசமும் தென்னிந்தியாவை பயபக்தியோடு நோக்க வைத்திருக்கும் இரண்டு ஆலயங்கள்...திருப்பதி ஏழுமலையானும், சபரிமலை ஐயப்பனும். இதில் முன்னவருக்கு வருஷம் முழுக்க கோலாகலம், இளையவருக்கோ கார்த்திகையில் துவங்கும் சீசன் தை மாதத்தில் நிறைவடையும்.
இந்த வருடத்தில் மகரஜோதி முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களுக்கு சபரிமலையில் ஆராதனை உற்சவங்கள் நடந்தேறி நடைசாத்தல் நிகழவிருக்கிறது. எஞ்சியிருக்கும் ஆலாபனைகள் என்னென்னவென்று பார்த்துவிடுவோமா?...
எழுந்தருளள்:
ஜனவரி 14 முதல் 18 வரை இரவு ஒன்பதரை மணிக்கு மாள்கைப்புறாத்தம்மன் கோவிலில் இருந்து சன்னிதானத்தில் 18-ம் படிக்கு முன்னர் யானை மீது எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாளிகைப்புறத்தம்மன் வருகிறார் என்பது ஐதீகம்.
படிபூஜை:
புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை தீபாராதனைக்கு பின் இரவு ஏழு மணி ம்தல் எட்டு மணி வரை படிபூஜை நடக்கும். இந்த நாட்களில் மாலை ஆறரை முதல் இரவு எட்டு மணி வரை பக்தர்கள் பதினெட்டாம்படி ஏற முடியாது.
நெய் அபிஷேகம்:
கடந்த இரண்டு மாதங்களாக நடந்த நெய் அபிஷேகம் ஜனவரி 18 காலை பத்து மணிக்கு நிறைவு செய்யப்படும். அதை தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு, தேவசம்போர்டு சார்பில் களபம் பூஜிக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதற்கு பின் நெய் அபிஷேகம் செய்ய முடியாது.
சரங்குத்திக்கு...
செவ்வாய் முதல் வியாழன் வரை 18ம் படி முன் எழுந்தருளும் மாளிகைப்புறத்தம்மன், வியாழன் இரவு ஒன்பதரை மணிக்கு சரங்குத்தியில் எழுந்தருள்வார்.
தரிசனம் முடிவு:
வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும். பத்தரை மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடக்கும்.
நடையடைப்பு:
வரும் சனிக்கிழமை காலை ஆறுமுப்பது மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிந்தி ராஜராஜவர்மா, ஸ்ரீகோயில் முன்புறாம் வருவார். அப்போது மேல்சாந்தி, கோயில் நடை அடைத்து சாவியையும், கோயில் வருமானமாக சிறுபணத்தையும் கொடுப்பார். அதை பெற்றுக் கொண்ட பின் சாவி, பண முடிப்பை மேல் சாந்தியிடம் கொடுக்கும் மன்னர் பிரதிநிதி, ‘வரும் காலங்களிலும் சபரிமலையில் பூஜைகளை முறையாக நடத்த வேண்டும்.’ என கூறி ஆபரணங்களுடன் விடை பெறுவார்.
ஆக 2017-2018 ஆண்டுக்கான சபரிமலை சீசன் அதோடு நிறைவு பெறும்.