
ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பாகிஸ்தானின் புல்லி வகை நாய்க்கு ரூ.575 அபராதமாக ரெயில்வே அதிகாரிகள் விதித்த சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியில் இருந்து ஐதராபாத் நகருக்கு தக்சின் எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை சென்றது. இதில் பயணம் செய்த ஒரு பயணி, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புல்லி வகை நாயை ரூ.33 ஆயிரத்துக்கு விலை கொடுத்து வாங்கி தன்னுடன் அழைத்து வந்திருந்தார். இவர் ரெயிலில் சமையல் கூடத்தில் பயணித்து வந்தார். அந்த நாய் குட்டிக்கு டிக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஆக்ரா ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளை சோதனையிட்டபோது, அந்த பயணியையும் சோதனையிட்டார். அப்போது, அந்த பயணி தன்னுடன் நாயை அழைத்து வந்து இருந்ததை டிக்கெட் பரிசோதகர் கண்டுபிடித்தார். பயணியிடம் நாய்க்கு தனியாக டிக்கெட் பெற்று இருக்கிறீர்களா? எனக் கேட்டதற்கு, அந்த பயணி இல்லை எனக் கூறினார்.
இதனால், அதிகாலை 2.15 மணிக்கு அந்த பயணியும், நாயும் ரெயிலில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு, ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இந்த நாய் பாகிஸ்தானின் புல்லி வகையைச் சேர்ந்தது. இதை ரூ.33 ஆயிரத்துக்கு ஹரியானாவில் ஒருவரிடம் விலை கொடுத்து வாங்கினேன், இதை ஐதராபாத்தில் உள்ள ஒரு ரியல்எஸ்டேட் அதிபருக்கு கொண்டு செல்கிறேன் என்று அந்த பயணி தெரிவித்தார். நாய்க்கு டிக்கெட் எடுக்க மறந்துவிட்டேன் என்றார்.
இதையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பாகிஸ்தான் நாய்குட்டிக்கு ஜி.எஸ்.டி வரி 27.30 உள்பட மொத்தம் ரூ.575 அபராதம் விதிக்கப்பட்டது.