
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காகக் கழற்றச் சொன்ன சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த பணியில் ஈடுபட்ட பள்ளியில் பணியாற்றும் 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை நாடு முழுவதும 103 மையங்களில் 11.35 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதினார்கள். நேற்று முன்தினம் முழுக்க நடைபெற்ற இந்த தேர்வின்போது மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
அதிலும், கேரளாவில் கண்ணூர் நகரிலுள்ள டிஐஎஸ்கே என்ற ஆங்கில மீடியம் பள்ளியில் நடைபெற்ற தேர்வின்போது, கெடுபிடி என்ற பெயரில் நடந்த அராஜக சம்பவம் அரங்கேறியது. தேர்வு எழுத வந்த மாணவியை பிராவை கழற்றச் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பிரா ஹுக், மெட்டல் பொருளால் ஆனது என்பதால், மெட்டல் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்று காரணம் கூறி, அதே இடத்தில் பிராவை கழற்றுமாறு தேர்வை மேற்பார்வையிட்ட ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். அப்படி செய்யாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் எனவும் கடுமையாக கூறினர்.
எனவே, நான் பொது இடத்தில் வைத்து பிராவை கழற்றி, எனது தாயாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றேன்" என்று பயம் மாறாத குரலில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் அந்த மாணவி.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இதனால் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிரியைகள், ஷீஜா, சஹைனா, பிந்து, மற்றும் சஃபீனா ஆகியோர் ஒரு மாதகாலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.