46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது… தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் விருது அறிவிப்பு… யார் அவர்?

By Narendran SFirst Published Aug 25, 2022, 11:46 PM IST
Highlights

தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் டெல்லியில் வழங்குவார். அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியான ஆசிரியர்களை, அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைப்பது வழக்கம்.

இதையும் படிங்க: சிபிஐ நீதிமன்ற நீதிபதிக்கு அச்சுறுத்தல்… நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!!

அந்த வகையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுக்குழு பரிந்துரை செய்தது. தமிழகத்தில் இருந்து திருப்பூர் ஜெய்வாய்பாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஏ.ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, குண்டூர் சுப்பையா பிள்ளை தி.நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி ராமசந்திரன், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி-அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஏ.முருகன், கரூர் மாவட்டம், பில்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆர்.ஜெரால்ட் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியராஜ், திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே.பிரதீப், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கே.ராமச்சந்திரன் ஆகிய 6 ஆசிரியர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி பாதுகாப்புப் படையில் மின்னல் வேகத்தில் ஓடும் முதோல் வேட்டை நாய்; இதன் சிறப்புக்கள் என்னென்ன?

இவர்களுக்கான நேர்காணல் தேர்வு, தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கே.ராமச்சந்திரன் 2022ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல புதுச்சேரியில் முதலியார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவுக்குத் தேசிய விருது வழங்கப்பட உள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார். 

click me!