
இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சரியாக காலை 7:30 மணிக்கு தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி, 12வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த ஆண்டின் கருப்பொருள் ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா), 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான புரட்சிகர திட்டங்களை வலியுறுத்துகிறது.
பிரதமர் மோடியின் உரையில், பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம், பசுமைப் பொருளாதாரம், மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவை முக்கிய கவனம் பெறுகின்றன. 6,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள், உயர் அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றும் போது வானில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் ஹெலிகாப்டரில் Operation Sindoor என்ற வாசகம் இடம் பெற்ற கொடியும் பறக்கவிடப்பட்ட சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.