ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: கிஸ்ட்வாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்

Published : Aug 14, 2025, 02:52 PM IST
jammu and kashmir

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் உள்ள சாஷோட்டி கிராமத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் உயிர் சேதங்கள் குறித்த அச்சம் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் உள்ள சாஷோட்டி கிராமத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பு (cloudburst) ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் மச்சைல் மாதா யாத்திரையின் தொடக்கப் புள்ளிக்கு அருகில் நடந்துள்ளது.

கிஸ்ட்வார் மாவட்ட துணை ஆணையர் பங்கஜ் ஷர்மா இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். "கிஸ்ட்வாரின் சாஷோட்டி பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன," என்று அவர் தெரிவித்தார். வெள்ளத்தில் அப்பகுதியில் இருந்த 'லங்கர்' எனப்படும் சமுதாயக் கூடம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மீட்புப் பணிகள் மற்றும் வானிலை எச்சரிக்கை

சம்பவ இடத்திற்கு உடனடியாக உள்ளூர் நிர்வாகக் குழுக்கள் மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். சேதங்களை மதிப்பிடும் பணியும், மருத்துவ ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம், ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் அடுத்த 4 முதல் 6 மணி நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை, இடி மின்னல், மற்றும் சூறாவளி காற்றுக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் கண்காணிப்பு

மத்திய இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் ஷர்மாவிடமிருந்து அவசர செய்தி கிடைத்ததையடுத்து, துணை ஆணையருடன் பேசியதாகக் கூறினார்.

அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், "சோசிட்டி பகுதியில் ஏற்பட்ட இந்த மேக வெடிப்பு பெரும் உயிர் சேதங்களுக்கு வழிவகுக்கலாம். நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளது, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எனது அலுவலகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!