செல்லாத நோட்டு விவகாரத்தில் அரசை எதிர்த்து வழக்கு போட கூடாதாம் - சொல்கிறார் முகுல் ரோஹத்கி

Asianet News Tamil  
Published : Nov 18, 2016, 03:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
செல்லாத நோட்டு விவகாரத்தில் அரசை எதிர்த்து வழக்கு போட கூடாதாம் - சொல்கிறார் முகுல் ரோஹத்கி

சுருக்கம்

மக்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ரூ.4500 வரை மாற்றிக்கொள்ளும் அளவை, ஏன், ரூ.2 ஆயிரமாகக் குறைத்தீர்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக வழக்கு போடக்கூடாது என்று மக்களை தடுக்க முடியாது என்று மத்திய அரசுக்கு குட்டு வைத்தது.

நாட்டில் கள்ளநோட்டு, கருப்பு பணத்தை அழிக்கும் நோக்கில், மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாததாக கடந்த 8-ந்தேதி அறிவித்தது. அதன்பின், மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, வங்கியில் மாற்றிக்கொள்ள பெரும் பாடு பட்டு வருகின்றனர். வங்கியின் முன் நீண்டவரிசையில் கால்கடுக்க நின்றும், பணம் எடுக்கமுடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பை எதிர்த்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கீழ்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுவருகிறது. அந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே உயர்நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. “ மத்திய அரசின் செல்லாத ரூபாய் அறிவிப்பை கேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.  அவர்களை நீதிமன்றத்துக்கு செல்லாதீர்கள் என்று உத்தரவிடமுடியாது'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மக்கள் செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து, ரூ4500 வரை மாற்றிய நிலையில்,அதை ஏன் ரூ.2 ஆயிரமாக மத்திய அரசு குறைத்தது?. ரூ.100 நோட்டுக்களுக்கு ஏதேனும் பற்றாக்குறை வந்துவிட்டதா?. அல்லது, நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறதா? எனக் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, “ செல்லாத ரூபாய் அறிவிப்பு பின் மத்திய அரசு பல நடவடிக்களை எடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டில் நிலவும் சூழலை உயர்மட்டக்குழு ஒன்று கண்காணித்து வருகிறது. நாளுக்கு நாள் வங்கியில் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது'' என்றார்.

இந்த மனுமீதான விவாதத்தின் போது, அரசு தலைமை வழக்கறிஞர் முகல் ரோகத்கிக்கும், எதிர்தரப்பு வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கபில் சிபல் ஒரு குறிப்பிட்ட சார்பில் இருந்து, கொண்டு இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார் என முகுல் ரோகத்கி குற்றம்சாட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!