கவனமாக இருங்க மோடி…!! மக்கள் புரட்சிக்கு வித்திட்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு...

Asianet News Tamil  
Published : Nov 18, 2016, 02:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
கவனமாக இருங்க மோடி…!!  மக்கள் புரட்சிக்கு வித்திட்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு...

சுருக்கம்

மக்களை கஷ்டப்படுத்தி, மனம் வெதும்பச் செய்து ஆட்சி நடத்திய எந்த ராஜ்ஜியமும் நீண்ட நாள் இருந்ததாக வரலாறு கிடையாது.

நம் நாட்டு மக்களிடம் 86 சதவீதம் புழக்கத்தில் இருக்கும், ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை ஒரே ஒரு மணி நேர அறிவிப்பில், அடுத்த 4 மணிநேரத்தில் அனைத்தையும் செல்லாததாக மாற்றினார் நம் பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, நாட்டின் நலனுக்காக மக்கள் 50 நாட்கள் பொறுமை காக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உருக்கமாக மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் இன்றி எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையால், கடந்த 10 நாட்களாக மக்கள் படும் துன்பத்துக்கு அளவில்லை. ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தங்களுக்கு ஏற்ற அளவில் கஷ்டத்தையும் சந்தித்து, கண்ணீர் விட்டு வருகின்றனர்.

எந்த ஏ.டி.எம்.களில் பணம் இருக்கிறது?. எந்த வங்கியில் 100 ரூபாய் கொடுக்கிறார்கள்.? என மக்கள் தங்கள் சொந்த வேலையை எல்லாம் மறந்துவிட்டு, திசை தெரியாமல் தெருத்தெருவாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

காய்கறிகள் வாங்க காசு இல்லை, வியாபாரிகள், விவசாயிகள், ஒட்டல் நடத்துபவர்கள், மளிகை கடைக்காரர்கள் என எல்லோரின் வியாபாரமும் முடங்கிவிட்டது.

வாரம் முழுவதும் வேலை செய்து கூலி கிடைக்காத தொழிலாளர்கள், படகுகளுக்கு டீசல் வாங்க முடியாத மீனவர்கள், சாலை ஒரத்தில் எதோ ஒரு மாநிலத்தில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள், மகளின், மகனின் திருமணத்துக்கு காசில்லாமல்் தவிக்கும் அப்பாக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வீட்டை விட்டு, மேன்சனில் தங்கியிருக்கும் இளைஞர்கள் என அனைவரும் தவிக்கிறார்கள்.


பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் ஒழிப்பால்,சாமானிய பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அடிப்படைத் தேவைக்காக தெருத் தெருவாக அலைந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைப் போலவே பல நாடுகளிலும் கூட இது போல் சொந்த நாட்டு கரன்சியை மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

மாறாக, அந்த நாடுகளில் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை. வறுமையை விரட்ட முடியவில்லை. உள்நாட்டுக் கலகத்துக்கும், புரட்சிக்குமே அவை வழிகாட்டின.  இதற்கு முன்பு பல நாடுகளிலும் இதுபோல அதிரடியாக பெரிய மதிப்பிலான பணத்தை ஒழித்துப் பார்த்தனர். அவையெல்லாம் ச்சீ..ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்துபோல்தான் முடிந்துன.

ஆனால், விதிவிலக்காக இங்கிலாந்து மட்டுமே இந்த நடவடிக்கையை மிக புத்திசாலித்தனமாகக் கையாண்டது. இங்கிலாந்து பவுண்ட்களையும் புழக்கத்தில் விட்டு, அதேசமயம், ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இணைந்து, யூரோ கரன்சியையும் புழக்கத்துக்கு கொண்டு வந்தது. இந்த நடவடிக்கையில் வளர்ந்த நாடுகள் சீரான திட்டமிடல், முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் செய்த காரணத்தால் இது ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக முடிந்தது. 

சோவியத் யூனியன்

1991-ம் ஆண்டு. சோவியத் யூனியன் சோவியத் யூனியன் வெடித்துச் சிதறக் காரணமாக இருந்ததும் அதிபர் கார்பசேவின் இந்த ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைதான். கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயரிய மதிப்பிலான ரூபிளை திரும்பப் பெறுவதாக திடீரென அதிபர் கார்பசேவ் அறிவித்தார் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 50 மற்றும் 100 ரூபிள் நோட்டுகள் ஒழிக்கப் பட்டன.

ரூபிள் ஒழிப்பால் நாட்டில் பணவீக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. மாறாக விலைவாசி படுவேகமாக உயர்ந்தது.  மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகி, அரசின் மீது நம்பிக்கை இழந்தனர். மக்களிடையே பெரும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்து, பொருளாதாரம் சீர்குலைந்தது. அதிபர் கார்பசேவ் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் அடுத்த ஆண்டே சோவியத் யூனியன் சுக்கு நூறாக சிதறியது. வல்லரசு நாடு என்ற அந்தஸ்தையும் இழந்தது.

ஆனால், இதில் கிடைத்த பாடத்தை வைத்து கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மீண்டும் ரூபாய் மாற்றும் திட்டத்தை படுகவனமாகச் செயல்படுத்தியது. மிகச்சரியான திட்டமிடல் காரணமாக எந்த விதமான குழப்பமும் இல்லாமல் முடிந்தது. 

 

வடகொரியா

2010ம் ஆண்டு வட கொரியாவின் மறைந்த சர்வாதிகாரி கிம் ஜோங் 2 இதேபோன்ற கரன்சி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தி, பணத்தின் மதிப்பை குறைத்தார். பொருளாதாரத்தை இறுக்கி, கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் என்று நம்பினார். ஆனால் அது பெரும் விபரீதத்திற்கே வழிவகுத்தது.  நாடே பஞ்சத்தில் மூழ்கியது. மக்கள் பசி பட்டினியால் வாடினர். உணவுக்கு வழியின்றி பலர் செத்து மடிந்தனர். விலைவாசிகள் வாங்க முடியாத அளவு உயர்ந்தது. இதற்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். இந்தச் சீர்திருத்தத்திற்கு ஆலோசனை கூறிய நிதித்துறை அமைச்சரை தலையைத் துண்டித்துக் கொலை செய்தது உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்தது. 

ஜயர்

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ளது ஜயர் நாடு. 1990களில் அந்நாட்டு சர்வாதிகாரி மொபுடு செசெ செக்கோ இதுபோல் ரூபாய் நோட்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டார். ஆனால், திட்டமிடாத இந்த செயலால், பெரும் பொருளாதார சீர்குலைவுகளை அந்த நாடு சந்தித்தது. பெரும் பண வீக்கத்தை சந்தித்து டாலருக்கு எதிராக ஜயர் நாட்டு கரன்சியின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. உள்நாட்டுப் போர் வெடித்தது. 1997ல் மொபுடு ஆட்சியிலிருந்து தூக்கி வீசப் பட்டார்.

 

நைஜீரியா…

ேமற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது நைஜீரியா நாடு. கடந்த  1984ம் ஆண்டு ராணுவ சர்வாதிகாரி முகம்மது புஹாரி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கிறேன் என்று கூறியபுதிய கரன்சி நோட்டுக்களை, கலர் கலராக வெளியிட்டு, பழைய கரன்சிகளை திரும்பப் பெற்றார்.  ஆனால், அந்த நடவடிக்கையால், நாடு பெரும் கடனில் சிக்கி, பொருளாதாரம் சீர்குலைந்து சின்னாபின்னமானது.

 

கானா..

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது  கானா நாட்டு. 1982-ம் ஆண்டு அந்நாட்டு அரசு புழக்கத்தில் இருந்த 50 செடி கரன்சியை ஒழித்தது. வரி ஏய்ப்பாளர்களையும், ஊழல்வாதிகளையும், கருப்பு பணத்தை பதுக்குவோர்களுக்கு எதரிரான நடவடிக்கை என அரசு தெரிவித்தபோதிலும், சரியான திட்டமிடல் இல்லாத காரணமாக வங்கிகள் சீர்குலைந்தன. பல மைல் தூரம் நடந்து வந்து வங்கிகளில் பணத்தை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்ற முடியாமல் பல கோடிப் பணம் வீணாக மூட்டை மூட்டையாக வீசப்பட்டது. 

மியான்மர்…

கடந்த 1987-ம் ஆண்டு மியான்மர் நாட்டில் இருந்த ராணுவ ஆட்சியாளர்கள், நாட்டில் புழக்கத்தில் இருந்த, 80 சதவீத கரன்சிகளை மதிப்பிழக்கச் செய்தது. கருப்பு பணத்தையும், கள்ளச்சந்தையையும் முடக்கும் நடவடிக்கையாக மக்கள் மத்தியில் ராணுவ ஆட்சியாளர்கள் பரப்பினர். ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர் புரட்சியும், அதைத்தொடர்ந்து மக்கள் புரட்சியும் வெடித்து. முடிவில் ராணுவ ஆட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து, கரன்சி மாற்று நடவடிக்கையை கைவிட்டனர். 

 

மக்கள் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்…

எந்த செயலுக்கும் திட்டமிடல் இல்லாவிட்டால் தோல்விதான். சரியான திட்டமிடல் இல்லாததால் வந்த வினைதான் இந்த நாடுகளில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம். இந்தியாவிலும் கூட தற்போது முறையான திட்டமிடல் இல்லாமல்தான் பெரும் குழப்பமாக உள்ளது.

500, ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பை என்ற மோடியின் நடவடிக்கை எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்யத்தான் இந்த நடவடிக்கை என்று அரசு சொல்லுமேயேனால் இந்தத் திட்டத்தை தோல்வி என்று இப்போதே கூறி விடலாம்.. காரணம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது 

மக்கள்தான்..

பெரிய கோடீஸ்வர்களோ, பெரும் பணக்காரர்களோ, எம்.பி.கள், எம்.எல்.ஏக்களோ வங்கியின் முன் வரிசையில் நிற்கவில்லை.  ஏராளமான பணத்தை மூட்டைக் கட்டி வைத்திருப்பவர்களும், ஊழல் செய்து பணத்தை புதைத்து வைத்தவர்கள் வங்கி வாசலில் கால் கடுக்க நிற்க வில்லை. மாறாக அப்பாவி பொதுமக்கள்தான்.

கள்ள நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை முதலில் பாராட்டிய பலர், இப்போது அரசுக்கு எதிரான கேள்விகளை அடுக்கத் தொடங்கியுள்ளனர். ஏ.டி.எம். முடக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினர் வீதி வீதியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 

இவை எல்லாம் மோடி மீது மக்கள் வைத்திருந்த அபிமானத்தை, முடக்கி விட்டன.

ஒருவாரத்தில் நிலைமை சீரடையும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மோடி 50 நாட்கள் பொறுமையாக இருங்கள் என்றார், நிதியமைச்சர் ஜெட்லியோ சில மாதங்கள் ஆகும் என்றார், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பல மாதங்கள் ஆகும் என்கிறார். யார் பேச்சை நம்புவது என மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.  

 

விரைந்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மக்கள் கோபம் மாற்றத்தை ஏற்படுத்தும்?  கவனமாக இருங்க மோடி…. 

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!