நேபாளம், அன்னபூர்ணா மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்தியப் பெண், இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பயண அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அன்னபூர்ணா மலைச் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 27 வயதான பல்ஜீத் கவுர், கடந்த செவ்வாய் கிழமை காலை காணாமல் போனதாக கூறப்பட்டு, இறந்துவிட்டதாக அதன் பயண அமைப்பாளர் அறிவித்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
சாதனைப் பெண்ணான பல்ஜீத் கவுர், சிகரத்தின் அருகே தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தனியாக விடப்பட்டார். இன்று காலை வரை எந்தவித ரேடியோ தொடர்புகளும் இல்லாமல் இருந்தார்.
கூடுதல் ஆக்ஸிஜன் இல்லாமல், உலகின் 10வது உயரமான சிகரத்தை எட்டிய பல்ஜீத் கவுரை, ஹெலிகாப்டர் மூலம் தேடிச் சென்ற குழு கண்டுபிடித்துள்ளது. இதனை, 4வது முகாம் பயணத் தலைவர் பசாங் ஷெர்பா கூறியுள்ளார்.
பல்ஜீத் கவுர் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வந்த நிலையில், அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றும், அவருடனான ரேடியோ தொடர்பை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம் என பசாங் ஷெர்பா உறுதிபடுத்தியுள்ளார். தற்போது அவரை மீட்டு கொண்டுவரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல்ஜீத் கவுரை பாதுகாப்பாக மீட்டு கொண்டு தேவையான அனைத்து முயற்சிகளையும் பயண நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்ஜீத் கவுர் நல்ல மனநிலையில் இருக்கிறார் என்பதை நாங்கள் தெரியப்பட்டுத்த விரும்புகிறோம் என பயண நிறுவனம் கூறியுள்ளது. பல்ஜீத் கவுரிடம் இருந்து உடனடி உதவி தேவை என ரேடியோ சிக்னல் கிடைக்கப்பெற்றது. அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தேடுதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் மீட்பு குழு, முழு வீச்சில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்தடுத்த அண்மைத் தகவல்களை எங்களது சமூக ஊடக சேனல்கள் மூலம் வழங்குவோம் என்றும், மேலும் சமீபத்திய தகவல்களுக்கு எங்களை பின்தொடருங்கள் என்றும் பயண நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பசாங் ஷெர்பாவின் தெரிவித்ததன் படி, பல்ஜீத் கவுரின் ஜிபிஎஸ் காட்டும் இருப்பிடம் 7375மீ (24,193அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பல்ஜீத் கவுர், இரண்டு வழிகாட்டிளுடன் கடந்த திங்கட்கிழமை அன்று மாலை 5.15 மணியளவில் அன்னபூர்ணா மலையை ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்ஜீத் கவுரை கண்டுபிடிக்க 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், 4வது முகாமில் இருந்து கீழே இறங்கும் போது 6000மீட்டர் ஆழத்தில் விழுந்து காணமல் போன மற்றொரு மலைஏறுபவரான அனுராக் மாலுவை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என முகாம் அதிகார்கள் தெரிவித்துள்ளனர்.