
பணம் இல்லாத ஏடிஎம் இயந்திரத்துக்கு கேரளாவில் சிலர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளை தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்கள் முன்பும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
சில வங்கிகள் ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பினாலும் அவையும் சில மணி நேரங்களிலேயே காலியாகி மூடப்பட்டு விடுகின்றன. இதன் காரணமாக ஏடிஎம் இயந்திரங்களை மக்கள் தேடி அலையும் காட்சிகளை நாம் பார்த்துவருகிறோம்.
தங்களது அன்றாட தேவைகளுக்காக பணம் எடுக்க மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது வரையிலும் 33 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் கடுப்பான சிலர் அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.