சிம்லாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானத்தில் இன்று மலை பைக்கிங் போட்டி தொடங்க உள்ளது..
எம்டிபி சிம்லா என்று அழைக்கப்படும் மலை பைக்கிங் போட்டியின் 10வது பதிப்பு இன்று தொடங்க உள்ளது.. இதில் மொத்தம் 88 ரைடர்கள் பங்கேற்கின்றனர். இமாச்சலப் பிரதேசத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் அனிருத் சிங் தாக்கூர் மலை பைக்கிங் போட்டியை மாலை 4 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், பங்கேற்பாளர்கள் ஒரு நாளில் சுமார் 65 கி.மீ. பயணிக்க வேண்டும்.. முதல் நாளில், அவர்கள் ரிட்ஜ் மைதானத்தில் இருந்து தங்கள் பந்தயத்தைத் தொடங்கி, குஃப்ரி வழியாக மஷோப்ராவை அடைவார்கள். 2-வது நாளில், பந்தயம் பாட்டர் ஹில்ஸ் பகுதியில் முடிவடையும்.
எம்டிபி சிம்லா அமைப்பாளர் ஆஷிஷ் சூட் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிடம் இதுகுறித்து பேசிய போது “ 88 பங்கேற்பாளர்களில், 11 பெண்கள் உள்ளனர்.. இந்தப் பந்தயத்தில், எங்களுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் பிரதிநிதித்துவம் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வோர், மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பிலும் பங்கேற்பாளர்கள் உள்ளனர்..” என்று கூறினார்.
இந்த மலை பைக் போட்டியில் 65 வயதான நபர் ஒருவரும் பங்கேற்கிறார்.. அதே போல் இளவயது பங்கேற்பாளராக 11 வயது சிறுவன் பங்கேற்கிறார்... மூத்த பங்கேற்பாளர், சிம்லாவைச் சேர்ந்த மகேஷ்வர் தத், செய்தித்தாள் விற்பனையாளராக பணிபுரிகிறார். 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஏழு பேர் பங்கேற்கின்றனர்.
தேசிய சாம்பியன் மற்றும் 3 முறை தங்கப் பதக்கம் வென்ற சுனிதா ஷ்ரேஸ்தா, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் தேசிய தங்கப் பதக்கம் வென்ற ஹீரோ ஆக்ஷன் டீமின் அக்ஷித் கவுர் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் பங்கேற்கின்றனர். இவர்கள் தவிர, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மவுண்டன் பைக்கிங் சாம்பியன் பிரஹலாத் மற்றும் சென்னை மற்றும் ஜெய்ப்பூர் அணிகளும் பந்தயத்தில் பங்கேற்கின்றன. 42 வயதான ரைடர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அனுபமாவும் பந்தயத்தில் பங்கேற்கிறார்.
இமாச்சல பிரதேசம், டெல்லி, கோவா, தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஹரியானா பஞ்சாப், சண்டிகர் மற்றும் அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இருந்து ரைடர்கள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதையும் படிங்க : காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசிய பயங்கரவாதிகள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்...