
நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு புதிதாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) என்றால் என்ன? என்றே தெரியாது என்று தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, கடந்த 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்ததில் இருந்து பல மாநிலங்களில் வர்த்தகர்கள், தொழில்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குழப்பமான விதிமுறைகள், வரிவிதிப்பு முறைகள் இருப்பதாகவும், வரி அதிகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தனியார் மொபைல் அப்ளிகேஷன்(செயலி) நிறுவனான ‘வே டுஆன்லைன்’(way2online) ஜி.எஸ்.டி. வரியை மக்கள் எப்படி அறிந்து வைத்துள்ளனர?, விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? என்பது குறித்து ஜூன் 26 முதல் 30-ந் தேதி வரை ஆய்வு நடத்தியது.
நாடுமுழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 3.60 லட்சம் மக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை அளித்துள்ளனர். இதில் மெட்ரோ நகரங்கள், நகரங்கள், கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் முடிவு அந்த நிறுவனம் அறிக்கை வௌியிட்டுள்ளது-
அதில், நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட அதாவது 55 சதவீத மக்களுக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை குறித்து ஒன்றுமே தெரியாது என்பது தெரியவந்துள்ளது. 45 சதவீத மக்களுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து விழிப்புணர்வு இருக்கிறது.
இதில் தெலுங்கு பேசும் மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் மக்களில் ஏராளமானோர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை குறித்து அதிகமான விழிப்புணர்வு பெற்றுள்ளனர். பெரும்பாலான மக்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை என்பது எங்களுக்கு நல்ல செய்தி அல்ல எனத் தெரிவித்துள்ளனர். 42 சதவீத தெலுங்கு பேசும் மக்கள் ஜி.எஸ்.டி. வரியால் நன்மை கிடைக்கும் என்றும், 58 சதவீதம் மக்கள் ஜி.எஸ்.டியால் எந்த பயனும் இல்லை, அது குறித்து எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
நகரங்களில் வசிக்கும் மக்களில் 59 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இன்னும் 60 சதவீத மக்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால், தங்களின் வாழ்க்கையை ஒன்றும் சிறப்பாக மாற்றிவிடாது எனத் தெரிவிக்கின்றனர்.
80 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி.யால் பொருட்களின் விலைவாசி உயரும், என்றும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலேயே தமிழகத்தில் உள்ள மக்களுக்குத்தான் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து ஒன்றுமே தெரியவில்லை. விழிப்புணர்வு என்பதே இந்த மக்களுக்கு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து இதுதான்
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நகர்புறமக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி குறித்த நிலையற்ற தன்மை நீடிக்கிறது. 41 சதவீத மக்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் பொருட்களின் விலை உயரும் என்றும், 35 சதவீத மக்கள் ஜி.எஸ்.டி.யின் விளைவுகள் குறித்து ஒன்றும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.