போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டால் எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள்: ராஜீவ் சந்திரசேகர் அறிவுறுத்தல்!

போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டால் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்


செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட deep fake வீடியோக்களால் பாதிக்கப்படுபவர்ஜள் அருகில் உள்ள நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்து, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) கீழ் வழங்கப்படும் தீர்வுகளைப் பெற வேண்டும் என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

போலி தகவல்கள் மற்றும் deep fakeக்கால் ஏற்படும் குறிப்பிடத்தக்க சவால்களைக் கருத்தில் கொண்டு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது ஆலோசனையை வெளியிட்டுள்ளது. மேலும், டீப்ஃபேக்குகளின் பரவலுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க ஆன்லைன் தளங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

Latest Videos

“டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அளவில் தீங்கு  விளைவிப்பவை. குறிப்பாக, அவை பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். அனைத்து டிஜிட்டல் பயனர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதில் எங்களது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம், குறிவைக்கப்படும் எங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.” என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகள், 2021 இன் கீழ் எந்தவொரு பயனரும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பது ஆன்லைன் தளங்களுக்கான சட்டப்பூர்வ கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு பயனர் அல்லது அரசாங்கத்தால் புகாரளிக்கப்பட்டால், தவறான தகவல் 36 மணிநேரத்தில் அகற்றப்படுவதை சமூக வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும். சமூக வலைதளங்கள் இதற்கு இணங்கவில்லை என்றால், விதி 7, IPC விதிகளின்படி, பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்லலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் இதுபோன்ற போலியான உள்ளடக்கத்தை அகற்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

ரூ.1,330 கோடியில் 7,724 வீடுகள்: அமைச்சர் தாமோ அன்பரசன் தகவல்!

முன்னதாக, சமூக வலைதளங்களில் சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று நேற்று வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி பெண்ணான ஜாரா படேல் என்பவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தனது வீடியோ ஒன்றை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோவில் அவரது முகத்தை மாற்றிவிட்டு அதற்கு பதிலாக டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கியிருந்தனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், போலி வீடியோக்கள் தொடர்பான கவலைகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!