
டெல்லி மற்றும் மும்பையில் 62 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி, டெல்லியில் வழக்கத்தை விட இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும், மும்பையில் இரண்டு வாரங்கள் தாமதமாகவும் பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தென்மேற்கு பருவமழை ஜூன் 25 ஆம் தேதி மும்பை மற்றும் டெல்லியில் தொடங்கியுள்ளது. கடைசியாக 1961ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி இதேபோன்று டெல்லியிலும், மும்பையிலும் ஒரே நாளில் பருவமழை தொடங்கியது.” என இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டி.எஸ்.பாய் தெரிவித்தார்.
பொதுவாக மும்பை மற்றும் டெல்லியில் பருவமழை தொடங்குவதற்கான இடைவெளி குறைந்தது எட்டு முதல் பத்து நாட்கள் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு நடந்தது ஒரு அரிய நிகழ்வு என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், “அடுத்த 3 முதல் 5 நாட்களில் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இதன் போது, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்றார்.
ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் பருவமழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழைப்பொழிவு இயல்பை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தால் அல்லது மிகவும் பரவலாக இருந்தால், பருவமழை செயல்பாடு தீவிரமானதாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் என தெரிவித்துள்ளது.
நேற்று காலை 8.30 நிலவரப்படி 24 மணி நேரத்தில் 48 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பொழிவை டெல்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகம் பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் 86 மிமீ மழை பொழிவை மும்பையின் கொலாபா ஆய்வகம் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், மும்பையில் உள்ள சான்டாகுரூஸ் வானிலை மையத்தில் அதிகபட்சமாக 176 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு நாள் முன்னதாகவே பருவமழை தொடங்கி விட்டது. அம்மாநிலத்தில் நுழைந்த ஒரே நாளில் முழு மாநிலத்தையும் தென்மேற்கு பருவமழை அடைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது.
“அடுத்த 4-5 நாட்களுக்கு தென்மேற்கு பருவ மழையின் செயல்பாடு முழு வீச்சில் இருக்கும் என்று மாதிரிகள் பரிந்துரைக்கின்றன, அதற்கு பின்னர், பருவமழை சற்று பலவீனமடையும். அடுத்த 4-5 நாட்களில் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும்” என மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம்.ராஜீவன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் எல்-நினோ காரணமாக முழு நாட்டிற்கும் சாதாரண பருவமழையே இருக்கும் என்று கடந்த மே மாதம் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.