
திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மலைப்பாதையில் சாலை மார்க்கமாகவும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி ஆகிய நடைபாதைகளிலும் செல்வது வழக்கம்.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் அதோனியை சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 22ஆம் தேதி அலிபிரி மலைப்பாதை வழியாக ஏழுமலையானை தரிசிக்க நடந்து சென்றனர். அப்போது, ஆஞ்சநேயர் சுவாமி சன்னதி தாண்டி சிறிது தூரத்தில் அக்குடும்பத்தினர் சென்றபோது, தனது தாத்தாவுடன் சென்ற 5 வயது சிறுவனை கண்ணிமைக்கும் நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்றது.
இதனால், அதிர்ச்சியடைந்த அக்குடும்பத்தினர், பக்தர்கள் கூச்சலிட்டனர். ஆனாலும், சிறுவனை இழுத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சுமார் 500 மீட்டர் தூரம் அச்சிறுத்தை சென்று விட்டது. பக்தர்களின் கூச்சல் சத்தம் கேட்ட, அந்த பகுதியில் காவலில் ஈடுபட்டிருந்த காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் டார்ச் அடித்துக் கொண்டு சப்தம் போட்டப்படி சென்றனர். இதனால், சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் மாயமானது.
மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்த அமித் ஷா!!
ரத்தக் காயங்களுடன் அழுது கொண்டிருந்த சிறுவனை மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான பத்மாவதி இருதாலயா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சிறுவன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிறுவனுக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பக்தர்கள் குழுவாகச் செல்ல திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில், “சிறுத்தையால் தாக்கப்பட்ட சிறுவன் தற்போது நலமாக உள்ளார். அலிபிரியில் உள்ள காளி கோபுரத்தில் இருந்து, நரசிம்ம சுவாமி கோவில் வரையில் சிறுத்தை நடமாடுவது தெரிய வந்துள்ளது. அலிபிரி நடைபாதையில் இரவு 7:00 மணிக்கு மேல், காளி கோபுரம் பகுதியில் இருந்து, 200 பக்தர்கள் வீதம் குழுவாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் ஒரு பாதுகாவலரும் உடனிருப்பார். தங்களுடன் வரும் குழந்தைகளை, பக்தர்கள் குழுவின் நடுவே வைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் மாலை 6:00 மணி வரையிலும், அலிபிரி நடைபாதையில் இரவு 10:00 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.” என்றார்.
முன்னதாக, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். அவற்றில் ஒரு கூண்டில் சிறுத்தை சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுத்தையை வேறு இடத்தில் கொண்டு சென்று விடுவிக்கவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.