
இஸ்ரேல் நாட்டில் தற்போது பூத்துக்குலுங்கி வரும் மலர் ஒன்றுக்கு அந்நாட்டு அரசு மோடி என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளது. இதை இஸ்ரேல் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
மூன்று மூன்று நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தார். இந்தியப் பிரதமரின் வருகைக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில் கடந்த 70 ஆண்டுகளில் இஸ்ரேல் நாட்டுக்கு முதன்முதலாக இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தந்ததையொட்டி கொண்டாடும் வகையில் இஸ்ரேல் நாட்டில் அண்மைக்காலமாக பூத்துக்குலுங்கும் மலர் ஒன்றுக்கு அந்நாட்டு அரசு மோடியின் பெயரை சூட்டியுள்ளது.
'இஸ்ரேலி கிரைசாந்தமம்' என்ற மலர் இனி மோடி என அழைக்கப்படும் என இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் நாட்டின் ட்விட்டர் பக்கத்தில் #GrowingPartnership! என்ற ஹேஷ்டேகின் கீழ் அரசுத் தரப்பில் பகிர்ந்துள்ளனர்.
டான்சிங்கர் மலர் பண்ணைக்கு மோடி வருகை தந்ததை நினைவுகூரும் வகையிலேயே இஸ்ரேல் மலருக்கு மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது.