பிரதமர் மோடிக்கான எஸ்.பி.ஜி. பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் எவ்வளவு தெரியுமா? கடந்த முறையை விடஅதிகம்...

By Asianet TamilFirst Published Feb 4, 2020, 7:34 PM IST
Highlights

பிரதமர் மோடிக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வரும் சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கு (எஸ்.பி.ஜி.) மத்திய பட்ஜெட்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை காட்டிலும் ரூ.60 கோடி அதிகமாகும்.
 

பிரதமர் மோடிக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வரும் சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கு (எஸ்.பி.ஜி.) மத்திய பட்ஜெட்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை காட்டிலும் ரூ.60 கோடி அதிகமாகும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பிரதமர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) உருவாக்கப்பட்டது. 1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்த பிறகு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்க எஸ்.பி.ஜி. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, எஸ்.பி.ஜி. பாதுகாப்பு காலத்தை, அச்சுறுத்தலின் அளவை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யலாம் என திருத்தம் கொண்டு வந்தது.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. அதற்கு பதிலாக இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது. முன்னாள் பிரதமர்கள் தேவுகவுடா மற்றும் வி.பி. சிங்கின் எஸ்.பி.ஜி. பாதுகாப்பையும் மத்திய அரசு திரும்ப பெற்றது.

தற்போது 3000 பேர் கொண்ட எஸ்.பி.ஜி. குழு பிரதமர் நரேந்திர மோடி ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வருகிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எஸ்.பி.ஜி.க்கு தோரயமாகரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2019-20ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எஸ்.பி.ஜி.க்கான ஒதுக்கீடு ரூ.420 கோடியிலிருந்து ரூ.540 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

click me!