“ஹாரன் அடிச்சா சிக்னல்ல ரொம்ப நேரம் வெயிட் பண்ணுங்க”.. ஒலி மாசைக் கட்டுப்படுத்த மும்பை போலீஸார் நடவடிக்கைக்கு சூப்பர் வரவேற்பு!

By Asianet TamilFirst Published Feb 4, 2020, 7:28 PM IST
Highlights

ஒலி மாசைக் கட்டுப்படுத்த அவ்வப்போது லாரி, பஸ்களில் ஏர் ஹாரன்களை ஆர்டிஓக்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், மும்பை போலீஸார் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் ஒலி மாசு கட்டுப்படுவதுடன், மக்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 
 

ஒலி மாசைக் கட்டுப்படுத்த அவ்வப்போது லாரி, பஸ்களில் ஏர் ஹாரன்களை ஆர்டிஓக்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், மும்பை போலீஸார் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் ஒலி மாசு கட்டுப்படுவதுடன், மக்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

நாட்டின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் மும்பையில் ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஏராளமாக இருக்கின்றன, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வேலை செய்து வருகின்றனர். இதனால் இட நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சினைகள் மும்பையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வாகன நெரிசல் என்பது மும்பையின் தவிர்க்க முடியாத ஓர் அடையாளமாகவே மாறிவிட்டது. 4 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் ஆகிவிடும் என்ற நிலைமையில்தான் மும்பைவாசிகள் இயங்கி வருகின்றனர்.
2019-ம் ஆண்டில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் உலக அளவில் 4-வது இடத்தில் மும்பை உள்ளதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வாகன நெரிசலால் மும்பையில் காற்று மாசுவும் அதிகரித்துள்ளது. 

இவையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் வாகனங்கள் எழுப்பும் ம் ‘ஹாரன்' சத்தத்தால் ஒலி மாசு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது, மனிதனின் செவிக்கும், மூளைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு 85 டெசிபலுக்கு மிகாமல் ஒலி இருக்க வேண்டும். ஆனால், தற்போது மும்பையில் மேற்குறிப்பிட்ட டெசிபலுக்கும் அதிகமாக ஒலி அளவு இருக்கிறது.

இந்த ஒலி மாசால் மும்பை மக்களின் உடல் மற்றும் மனநிலையில் கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக. குறிப்பாக, முதியவர்கள், இதய நோயாளிகள், குழந்தைகள் இதனால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த ஒலி மாசுவுக்கு தீர்வு காணும் விதமாக ஒரு புதிய நடவடிக்கையை மும்பை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, மும்பை நகரில் உள்ள முக்கியமான சிக்னல்களில் சில நாட்களுக்கு முன்பு டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டன.
சிகப்பு நிற சிக்னல் இருக்கும்போது ‘ஹாரன்' ஒலி அளவு 85 டெசிபலுக்கு அதிகமாக சென்றால், சிக்னல் பச்சை நிறத்துக்கு மாறாது. அதற்கு பதிலாக, சிகப்பு சிக்னலில் மீண்டும் முதலில் இருந்து ‘கவுன்ட் டவுன்' தொடங்கும். இதனால், வாகன ஓட்டிகள் கூடுதல் நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டி வரும்.

இந்த புதிய நடைமுறை அமலான சில நாட்களிலேயே, சிக்னல்களில் ‘ஹாரன்' ஒலியின் அளவு கணிசமாக குறைந்துவிட்டதாக மும்பை மக்கள்ள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையை மும்பை முழுவதும் விரிவுபடுத்த போலீஸார் தயாராகி வருகின்றனர்.

click me!