“தீவிரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான்” - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு

 
Published : Oct 17, 2016, 09:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
“தீவிரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான்” - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு

சுருக்கம்

தீவிரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட ‘பிரிக்ஸ்‘ அமைப்பின் 2 நாள் மாநாடு கோவாவில் நடந்தது.
நிறைவு நாளான நேற்று மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிப்பது பற்றி அந்நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
பாகிஸ்தானை ஆதரிக்கும் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின், பிரேசில், தென் ஆப்பிரிக்க தலைவர்கள் முன்பாக பேசிய அவர் பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது,:-
இந்தியாவின் அருகில் உள்ள ஒரு நாடு(பாகிஸ்தான்) தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி தனது அரசியல் லாபங்களுக்காக தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும் வருகிறது. இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது.
நமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் அருகில் உள்ள ஒரு நாடு தீவிரவாதத்தின் தாயகமாக திகழ்கிறது.
இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை இணைக்கும் தாயகமாகவும் அந்த நாடு திகழ்கிறது. எனவே பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும், தனிப்பட்ட முறையிலும், கூட்டு முயற்சியாகவும் தீவிரவாதத்தை ஒடுக்க, கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது, நிதி உதவி செய்வது, ஆயுதங்களை வினியோகிப்பது, பயிற்சி அளிப்பது, அரசியல் ரீதியாக ஆதரிப்பது போன்றவற்றை பிரிக்ஸ் நாடுகள் திட்டமிட்டு துண்டிக்கவேண்டும்.
தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக வரைவு திட்டத்தை விரைந்து நிறைவேற்றவேண்டும். அப்போதுதான் பயங்கரவாதம் என்னும் அச்சுறுத்தலுக்கு நம்மால் தீர்வு காண இயலும்.
இன்றைய உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைத்து செயல்படுவது ஆகியவை மிகவும் அவசியமானது ஆகும். அப்போதுதான் நமது மக்களை நம்மால் பாதுகாக்க முடியும்.
தீவிரவாதம் நீண்ட நிழலாக பின்தொடர்ந்து நமது வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கிறது. எனவே உலக பொருளாதாரத்தை புதுப்பிக்கவேண்டும் என்றால் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் விரிவான நடவடிக்கைகள் மிகவும் அவசியம். அதற்கான தெளிவான திட்டம் தேவை. தீவிரவாத செயல்களை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஒரு சேர குரல் கொடுக்கவேண்டும்.
பாரீஸ் பருவ நிலை மாற்ற உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டு உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இதை நிறைவேற்றிட நாங்கள் உறுதி கொண்டு இருக்கிறோம். வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டையும் சமமான நிலையில் வைத்து முன்னேற்றம் காண்பதற்கு தீர்மானித்து உள்ளோம்.
கம்ப்யூட்டர் மூலம் குற்றங்கள், பெருங்கடல் பகுதிகளில் ஆட்களை கடத்தும் கடற்கொள்ளை போன்ற மரபு சாரா சவால்களும் நமக்கு பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு மோடி பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"