"கூட்டம் அமைதியாக நடக்கவேண்டும்" - எதிர்கட்சிகளிடம் மோடி கெஞ்சல்

First Published Jan 30, 2017, 4:47 PM IST
Highlights


கட்சிகளுக்கு இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட,  ‘மஹா பஞ்சாயத்து’ எனச் சொல்லப்படும் நாடாளுமன்றம் சமூகமாக செயல் பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி  வேண்டுகோள் விடுத்தார்.

அமளி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையுடன் தொடங்குகிறது. ஏனென்றால், நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில், பிரதமர் மோடியின், ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால்,  எந்த ஒரு முக்கிய மசோதாக்களும் நிறைவேறாமல் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது.

அனைத்துக் கட்சி கூட்டம்

இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த வேண்டும் என்பதால், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சிக் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டி இருந்தார்.  

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பங்கேற்கவில்லை

ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் பங்கேற்கவில்லை.

சிட்பண்ட் மோசடி தொடர்பாக அந்த கட்சியின் எம்.பி.கள் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்தது, மற்றும் ரூபாய் நோட்டு தடை ஆகியவற்றால் அந்த கட்சி பெரும் அதிருப்தியில் இருந்ததால், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மோடி வேண்டுகோள்

இந்த கூட்டம் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் நிருபர்களிடம் கூறுகையில், “ நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த வேண்டும் என்பதற்காக, அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.  தேர்தல் நேரத்தில், நம் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், நாடாளுமன்றம் என்பது மஹாபஞ்சாயத்து ஆகும். இது கண்டிப்பாக செயல் பட வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் வார்த்தைகளை கனிவுடன் கேட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்தனர்.

5 மாநில சட்டசபை தேர்தல் நடப்பதற்கும், மத்தியஅரசு பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்வதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. இது தொடர்பாக தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தங்களின் கருத்தை தெரிவித்துள்ளன.

பட்ஜெட்டின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும், நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று அரசு முயற்சிகளை எடுக்க உள்ளது'' எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், “ மத்தியஅரசு பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்தி இருக்க கூடாது. இதுபோன்ற சூழல் கடந்த 2012ம் ஆண்டு வந்தபோது, சட்டப்பேரவைத் தேர்தலுக்காக  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பட்ஜெட்டை தள்ளி வைத்தது.

5 மாநிலத் தேர்தல் நடக்கும் போது, பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும், அது தேர்தலில் வாக்காளர்களை பாதிக்கும் என்று நாங்கள் அரசிடம் கேட்டுக்கொண்டோம்.

 பட்ஜெட்கூட்டத்தொடரின் அடுத்த பகுதிக்கு முன்பாக இதுபோன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “ மத்திய அரசின் நியாயமற்ற செயலான ரூபாய் நோட்டுதடையால் நாடுமுழுவதும் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதலால், இது தொடர்பாக  குறைந்தபட்சம் 2 நாட்கள் விவாதம் நடத்த  வேண்டும் என்றும் அரசிடம் கேட்டுக்கொண்டோம். பட்ஜெட்டை முன்கூட்டியை தாக்கல் செய்வதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. நடப்புநிதியாண்டின் மூன்றாம் காலண்டு புள்ளி விவரத்தைகூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள்'' எனத் தெரிவித்தார்.

click me!