
கடந்த ஆண்டுவரை பிரதமர் மோடியின் பெயரிலான “மோடிமாம்பழம்” தான் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மாம்பழ சீசனுக்கு உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பெயரில் “யோகி மாம்பழம்” வந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாம்பழ ஆராய்ச்சியாளரான ஹாஜி கலிமுல்லா, இந்த ஆண்டு யோகிஆத்தியநாத் பெயரில் “யோகி மாம்பழத்தை” உருவாக்கி விற்பனைக்கு கொண்டுவர உள்ளார்.
லக்னோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மலிஹாபாத் எனும் கிராமத்தில் வசித்து வரும் ஹாஜி கலிமுல்லா மாந்தோட்டம் ஒன்று வைத்துள்ளார். மாம்பழ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கலிமுல்லா இதுவரை பல ஒட்டுரக மாம்பழங்களை உருவாக்கி அதற்கு சச்சின், ஐஸ்வர்யா ராய் எனபெயர் வைத்துள்ளார். கடந்த ஆண்டு பிரமதர் மோடியின் பெயரில் “மோடி மாம்பழத்தை” உருவாக்கினார்.
இது குறித்து கலிமுல்லா கூறுகையில் “ கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பெயரில் மோடி மாம்பழத்தை உருவாக்கினேன், இந்த ஆண்டு ஆதித்யநாத் பெயரில், “யோகி மாம்பழம்” விளைவித்துள்ளோன். நீளமாக, அதிக இனிப்பு சுவையுடன், அழகாக அந்த மாம்பழம் காட்சி அளிக்கிறது.
சமீபத்தில் என் மாம்பழத் தோட்டத்துக்கு வந்த மக்கள், ஒரே மரத்தில் 5 வகையான மாம்பழங்கள் விளைந்திருப்பதைக் கண்டு வியந்தனர். அவர்களின் புதிதாக விளைவிக்கப்பட்டுள்ள மாம்பழத்துக்கு என்ன பெயர் வைப்பது எனக் கேட்டபோது, அவர்கள் யோகி ஆதித்யநாத்தின் பெயரை கூறினார்கள். அதனால், “யோகி” என்று அந்த புதிய ரகத்துக்கு பெயர் வைத்துவிட்டேன்.
லக்னோவின் துசேரி, கொல்கத்தாவின் ஹஸ்ன்-இ-ஆரா ரக மாம்பழங்களை ஒன்றாக இணைத்து யோகி மாம்பழங்களை உருவாக்கி இருக்கிறேன். நிச்சயம் இந்த மாம்பழம் இனிப்பாக இருக்கும். விரைவில் விற்பனைக்கு அனுப்ப இருக்கிறேன்
கடந்த ஆண்டு நான் விளைவித்த மோடி மாம்பழம், இனிப்புச்சுவை கூடுதலாகவும், தோல் மிகவும் மெலிதாக, பார்க்க அழகாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு கலிபுல்லா விளைவித்த காசுல் காஸ் மற்றும் சாவுசா ரக மாம்பழங்களுக்கு சச்சின், ஐஸ்வர்யா ராய் என பெயரிட்டார். அந்த மாம்பழங்கள் ஒன்று ஒரு கிலோவரை எடை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.